August 5, 2026

சென்னை, பெங்களுருவில் அதிகம்; பருவநிலை மாற்றத்தால் தூக்கத்தை தொலைக்கும் தென்னிந்திய மக்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பரபரப்பான இந்த உலகில் அனைத்து விஷயங்களையும் உடனே செய்து முடித்து விட வேண்டும் என நினைக்கும் மனிதர்கள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டே வருகிறார்கள். பொருளாதார சூழ்நிலை காரணமாக இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைக்கின்றனர். அவ்வாறு உழைத்து கோடி கோடியாய் சேர்த்து வைத்த ஜாம்பவான்கள் கூட 100 வயது வரை வாழ்ந்ததில்லை என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இயற்கைக்கு எதிராக அல்லது இயற்கைக்கு மாறாக பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். குறிப்பாக விவசாய நிலங்களை விலை நிலங்களாக மாற்றுகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் மரங்களை வெட்டி ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்டிடம் என மார்தட்டி கொள்கின்றனர். நீர்வழி சாலைகளை மாற்றி அதற்கு வேறு ஒரு சாலையை போட்டு தருகின்றனர். பெருமழை வரும்போது இயற்கை தனது இயல்பான வழியில் சென்று மனிதர்களுக்கு பாடம் புகட்டுகிறது.

இருந்தபோதும் மனிதர்கள் திருந்தவில்லை. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. புவி வெப்பமயமாதல் நடைபெறுவதால் இன்னும் 200, 300 ஆண்டுகளுக்கு பின்பு பாதிப்பு ஏற்படும், நம்மை அது ஒன்றும் செய்யாது என மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் அதன் தாக்கம் தற்போது தொடங்கி விட்டது. ஒவ்வொரு தனி மனிதனும் புவி வெப்பமயமாதல் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர், தூக்கத்தை தொலைக்கின்றனர். இதுகுறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளிவந்து பலருக்கும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே மனிதர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரே நோக்கத்திற்காக தங்களது நேரத்தை செலவிட்டு வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பணம் தங்களது உயிரை காப்பாற்றுமா என்ற கேள்வியை ஒரு போதும் அவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டதில்லை.

ஒரு நோய் வருகிறது என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்களே தவிர, அந்த நோய் எதனால் வந்தது?, அது எப்படி வந்தது? என்று மக்கள் ஆராய மறுக்கின்றனர். இதன் விளைவாக அடுத்த அடுத்த தலைமுறையினரும் அதே தவறுகளை செய்கின்றனர். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத மனிதர்களால் வருங்கால சந்ததியினரின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்து வருகிறது என்பதை கசப்பான உண்மை. பருவநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்களின் தூக்க நேரம் கணிசமாக பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இரவு நேர வெப்பம் அதிகரிப்பது, தூக்கத்தின் தரத்தையும், உடல் மற்றும் மனநலத்தையும் பாதிக்கும் முக்கிய காரணியாக மாறி வருவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் நேரடிப் பாதிப்பால், தென் இந்திய நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் இயல்பான உறக்கத்தை ஆண்டுதோறும் பல மணி நேரம் இழந்து வருவதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரித்துள்ளது. நிலக்கரி, எண்ணெய் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் உலக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மனிதர்களுக்கு ஏற்படும் தூக்க இழப்பை முதன்முறையாக நேரடியாகக் கணக்கிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் ஒரு நபர் சராசரியாக 56 மணி நேரத்துக்கும் அதிகமான தூக்கத்தை அதிக வெப்பத்தின் காரணமாக இழந்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 10 சதவீதத்திற்கும் அதிகமான தூக்க இழப்புக்குப் பருவநிலை மாற்றமே முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்திய அளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தூக்க இழப்பில் தென் மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது. சென்னை நகரில் வசிக்கும் மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 93 மணி நேர தூக்கத்தை வெப்பத்தின் காரணமாக இழக்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக இரவு நேரங்களில் உடல் வெப்பத்தை குறைப்பதில் சிரமம் ஏற்படுவதால், தூங்குவதற்கான நேரம் தாமதமாகிறது. பெங்களூருவிலும் இதே நிலை காணப்படுகிறது. அங்கு வசிப்பவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 92 மணி நேர தூக்கத்தை இழக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசத்தில் 88.6 மணி நேரமும், கேரளாவில் 88.3 மணி நேரமும் தூக்க இழப்பு ஏற்படுவதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. பொதுவாக பகல் நேரத்தில் அதிகரிக்கும் வெப்பம் இரவில் குறைந்து, உடல் இயல்பான நிலைக்குத் திரும்பும். ஆனால் நகர்ப்புறங்களில் பகல் நேர வெப்பம் மட்டுமின்றி இரவு நேர வெப்பநிலையும் அதிகமாகவே காணப்படுகிறது.

கான்கிரீட் கட்டிடங்கள், தார்ச்சாலைகள் உள்ளிட்டவை பகலில் உறிஞ்சும் வெப்பத்தை இரவு நேரத்திலும் வெளியிடுவதால், நகரங்களில் இரவு நேர வெப்பநிலை குறைவது தாமதமாகிறது. இதனால் படுக்கைக்குச் சென்ற பிறகும் உடலில் வெப்பம் நீடித்து, ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குளிரூட்டும் சாதனங்கள் மற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்துவது ஓரளவுக்கு நிவாரணம் அளித்தாலும், அனைவருக்கும் அந்த வசதி கிடைப்பதில்லை. குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். தூக்கக் குறைபாடு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்ச்சியாக போதுமான தூக்கம் கிடைக்காதபோது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம். மேலும், சோர்வு மற்றும் பகல் நேர தூக்க கலக்கம், கவனச்சிதறல் மற்றும் நினைவாற்றல் குறைதல், மன அழுத்தம் மற்றும் எரிச்சல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இதயநோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளுக்கான அபாயம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் ‘நகர்ப்புற வெப்பத் தீவு’ (Urban Heat Island) விளைவும் தூக்க இழப்பை அதிகரிக்கிறது. கட்டிடங்கள் மற்றும் தார்ச்சாலைகள் அதிகமாக இருப்பதும், மரங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகள் குறைவதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். இதனால் நகரின் சில பகுதிகளில் இரவு நேரத்திலும் வெப்பம் அதிகமாகவே நீடிக்கிறது. ஏசி வசதி இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் இந்த வெப்பத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு உடல்வாகு இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் அவர்களது தூக்க நேரம் அமைய வேண்டும். சிலருக்கு 10 மணி நேரம் தூக்கம் கூட அவசியமாக இருக்கும்.

ஏனென்றால் அவர்களின் உடல்நிலை அப்படி இருக்கும். பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை ஆறு மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒரு மனிதன் தூங்க வேண்டும். போதிய அளவு தூங்கவில்லை என்றால் மனரீதியான பிரச்னைகள் அதிகரிக்கும். அதிக அளவு தூங்கினால் உடல் ரீதியான பிரச்னைகள் அதிகரிக்கும். எனவே இதனை கவனமுடன் கையாள வேண்டும். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நாம் உடனடியாக சென்று மருந்து சாப்பிட்டு தூங்கி விடுவோம், தூங்கி எழுந்தவுடன் சரியாகிவிடும். தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம். பொதுவாக நாம் வேலைக்கு சென்றவுடன் கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது, கண் எரிச்சல் அல்லது தூங்கி விழுகிறோம் என்றால் நாம் இரவில் முழுமையாக தூங்கவில்லை என்று அர்த்தம்.

தூக்கமின்மையால் முதலில் மன ரீதியான பிரச்னை அதிகரிக்கும், 90% மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும்.

தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களின் செயல்பாடுகளை உற்று கவனித்தால் நாம் அதை அறிந்து கொள்ளலாம். எதுவுமே இல்லாத பிரச்னைகளை பெரிதாக எடுத்து கொள்வார்கள். பெரிய பிரச்னைகளுக்கு எந்த ரியாக்ஷனும் காட்ட மாட்டார்கள். தவறான சிந்தனைகள் அவர்களுக்கு அதிகரிக்கும். இதிலிருந்து அவர்களுக்கு முழுமையான தூக்கம் கிடைக்கவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். நல்ல எண்ணங்களை, நல்ல சிந்தனைகளை வைத்து கொண்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும். அதேபோன்று அதிக அளவில் தூங்கினாலும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சர்க்கரை அளவு அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்னைகளும் வரும். இந்தியாவில் தட்ப வெட்பநிலை பொறுத்து இரவில் தூங்குவது தான் நல்லது. இரவில் 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த காலகட்டத்தில் ஆறு மணி நேரம் அல்லது 7 மணி நேரமோ தூங்குவது உடலுக்கு நன்மை தரும், என தெரிவித்தார்.

தீர்வு என்ன?

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதுடன், நகரங்களின் வெப்பநிலையைக் குறைக்கும் நடவடிக்கைகளும் அவசியமாகின்றன. நகரங்களில் அதிக அளவில் மரங்களை வளர்ப்பது, திறந்தவெளிப் பகுதிகளைப் பாதுகாப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது, கட்டிடங்களின் வடிவமைப்பில் வெப்பத்தைக் குறைக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், குறைந்த வருமான மக்களின் குடியிருப்புகளில் காற்றோட்ட வசதியை மேம்படுத்துதல், வெப்ப அலைகள் குறித்த முன் எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் அவசியம். வெப்பம் என்பது இனி பகல் நேரத்தில் மட்டும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை அல்ல. இரவில் கூட மனிதர்களின் தூக்கத்தைப் பறிக்கும் அளவுக்கு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இது பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Spread the love