August 5, 2026

ஓசூர் ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.3.36 லட்சம் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள ஜூஜூவாடி ஆர்டிஓவின் உள்வழி மற்றும் வெளிவழி சோதனைச் சாவடிகளில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (ஆக.4) அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை சுமார் 5.00 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். சுமார் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனை காலை 8.30 மணி அளவில் நிறைவடைந்தது.

சோதனையின்போது, உள்வழி ஆர்டிஓ சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளிடமிருந்து கணக்கில் வராத ரூ.2,02,800 ரொக்கப் பணமும், வெளிவழி சோதனைச் சாவடியில் ரூ.1,33,400 ரொக்கம் என மொத்தம் ரூ.3,36,200 பறிமுதல் செய்தனர்.

இந்தப் பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உள்வழி சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமதி மற்றும் அவரது உதவியாளர் மகாலட்சுமி ஆகியோரிடமும். வெளிவழி சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் அவரது உதவியாளர் விஜயா ஆகியோரிடமும் விசாரணை செய்தனர்.

Spread the love