February 7, 2026

“இந்தியா – பாக். ஆட்டம் நூறு சதவீதம் நடைபெறும்” – அஸ்வின் நம்பிக்கை | T20 WC 2026

சென்னை: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நூறு சதவீதம் நடைபெறும் என தான் கருதுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை (பிப்.7) தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்​தத் தொடரில் ‘ஏ’ பிரி​வில் நடப்பு சாம்பியனான இந்​தி​யா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்​லாந்​து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் தங்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டுமென வங்கதேச அணி, ஐசிசி-யை நாடியது. அது முடியாத காரணத்தால் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என ஐசிசி அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. தொடரை புறக்கணிப்போம் என அந்த அணி அச்சுறுத்தியது. அதற்கு ஐசிசி கடும் எதிர்வினையாற்றியது.

இந்நிலையில், இந்தியா உடன் வரும் 15-ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதாக அறிவித்தது. தங்கள் நாட்டு அரசின் அறிவுறுத்தலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் ஐசிசி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

அஸ்வின் நம்பிக்கை: “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நூறு சதவீதம் நடைபெறும். அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் பாகிஸ்தான் அதன் நிலைப்பாட்டை திரும்பப்பெறலாம். இந்த இரு அணிகள் இடையிலான ஆட்டத்தை பார்க்க நான் விரும்புகிறேன்.

இந்த முடிவால் அவர்களுக்கு (பாகிஸ்தான்) நிதி இழப்பு ஏற்படலாம். ஒளிபரப்பாளர்களுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படும். பாகிஸ்தானால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர்கள் ஐசிசி உடனான கூட்டத்தில் தெரிவிக்கலாம். அதேபோல பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு என்ஓசி வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

“புறக்கணிப்பு முடிவில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கக் கூடாது” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஆதரவாகவும், ஐசிசி-க்கு எதிராகவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.

Spread the love