August 19, 2026

டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகார்: மேட்டூரில் 3 தனியார் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மேட்டூர்: டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில், மேட்டூரில் 3 தனியார் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மின் வாரியத்தில் டிராஸ்ஃபார்மருக்கு தேவையான மின்கடத்தி கொள்முதலில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மேட்டூர் அருகே சிட்கோ, குஞ்சாண்டியூர், கோனூர் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் கண்டக்டர்ஸ் நிறுவனங்களில் இருந்து டிரான்ஸ்ஃபார்மருக்கு தேவையான பொருட்கள் கடந்த ஆட்சி காலத்தில் விநியோகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த 3 நிறுவனங்களில் இன்று காலை முதல் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு தனியார் நிறுவனங்களிலும் காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், நல்லாம்மாள், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் இன்று காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சோதனையில் நிறுவனங்களில் ஆன்லைன் பணப் பரிமாற்றம், ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதோடு, கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சோதனை மாலை வரை நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.

Spread the love