தாம்பரம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில், குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரை சென்ற 49 தமிழக யாத்ரீகர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த 14-ம் தேதி புறப்பட்ட இந்த குழுவில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர், சென்னையைச் சேர்ந்த 6 பேர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 49 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் 22 ஆண்களும், 27 பெண்களும் அடங்குவர்.
கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு நேபாளம்–சீனா எல்லைப்பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தில் குடியேற்ற அலுவலக கட்டிடம் பலத்த சேதமடைந்தது. அதன்பிறகு யாத்ரீகர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
குழுவின் பயண வழிகாட்டியும், டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மகனுமான சத்யநாராயணனும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார். கடைசியாக கடந்த 26-ம் தேதி காலை 8.42 மணியளவில் அவர் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சத்யநாராயணன் உள்பட 49 பேரிடம் இருந்தும் தகவல் இல்லை.
இதற்கிடையே, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் லதா பானுமதி (63), அருட்செல்வம் (64), கோபால், சரஸ்வதி மற்றும் சந்திரன் குப்புசாமி (52), மீனாட்சி நந்தகுமார் (34) ஆகிய 6 பேரும் இந்த குழுவில் சென்றுள்ளனர். இவர்களது நிலை குறித்தும் தகவல் இல்லாததால் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்தனர்.
கோபால்-சரஸ்வதி தம்பதியின் மகள் பொற்செல்வி, குரோம்பேட்டையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்று பெற்றோரின் நிலை குறித்து விசாரித்தார். இதையடுத்து சிட்லபாக்கம் போலீஸாரும், தாம்பரம் வட்டாட்சியரும் நிறுவனத்துக்கு சென்று யாத்ரீகர்களின் முழு விவரங்களை சேகரித்தனர்.
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த குழுவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தெரிவித்துள்ளார். இவர்கள் குறித்து நேபாளம், சீனா மற்றும் இந்திய தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காததால் இவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.

More Stories
கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
காவல், தீயணைப்புத் துறைக்கு ரூ.165 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
“காவிரி டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரி ஆக.28-ல் இ.கம்யூ போராட்டம்” – மு.வீரபாண்டியன்