பெரம்பலூர்: பெரம்பலூரில் இடைத்தரகர்களின்றி நடைபெற்ற ஏலத்தில் 2.79 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் ரூ.1.47 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஏலம் விடும் நடைமுறையை விவசாயிகள் வரவேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சின்ன வெங்காயம் ஏலம் விடப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் சின்ன வெங்காயம் ஏலம் நடைபெறவில்லை. இந்த நிலையில் பெரம்பலூர் விவசாயிகள் வெங்காய வணிக வளாகத்தில் சின்ன வெங்காயத்தை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி ஆட்சியர், செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைதொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர், கடந்த 28-ம் தேதி விவசாயிகளுடன் சின்ன வெங்காயம் ஏலம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இடைத்தரர்கள் இடையூறு இருக்கக்கூடாது. அரசே நேரடியாக தலையிட்டு, ஏலம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்ற வருவாய் கோட்டாட்சியர், சின்ன வெங்காயம் ஏலம் செப்.3-ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவித்தார். தொடர்ந்து வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தலைமையில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சின்ன வெங்காயம் ஏலம் நடந்தது. ஏலத்தை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தனர்.
இதில் 28 விவசாயிகள் மொத்தம் 2.79 மெட்ரிக் டன் அளவு சின்னவெங்காயம் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் 27 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்த வெங்காயமும் ரூ.1.47 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மணி கூறுகையில், “8 ஆண்டுகளுக்கு பின்பு சின்ன வெங்காயம் ஏலம் நடத்திருப்பது வரவேற்கதக்கது. விவசாயிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். திருச்சி, திண்டுகல், சென்னையில் சின்ன வெங்காயம் ஏலம் நடந்தால், கமிஷன் தாரர்கள், இடைத்தரகர்கள் தலையீடு இருக்கும். செட்டிகுளத்தில் அந்த பிரச்சினை இல்லை.
நேரடியாக விவசாயிகளுக்கு பணம் கையில் வந்துவிட்டது. வரும் வாரங்களில் இதைவிட கூடுதல் விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை ஊக்குவித்து வெங்காயம் ஏலம் நடைபெற வேண்டும் என்பதே விவசாயிகளின் நோக்கம்” என்றார்.
தொடர்ந்து பேசிய, வேளாண்மை துணை இயக்குநர், “விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த வாரம் வியாழக்கிழமையும் சின்னவெங்காயம் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் 2.79 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் ஏலம் விடப்பட்டது. குறைந்த பட்சமாக ஒரு கிலோ ரூ.25-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.76-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இது குறித்து மேலும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அடுத்த முறை கூடுதல் விவசாயிகள், வியாபாரிகளை பங்கேற்க செய்வோம்” என்று வேளாண்மை துணை இயக்குநர் கூறினார்.

More Stories
தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்வு
தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம்
பங்குச் சந்தை மோகத்தால் ரூ.2.3 கோடியை இழந்த இந்தியர்