இந்திய ஆட்டம் புறக்கணிப்பு: முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு இலங்கை வலியுறுத்தல் | T20 WC 2026

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
கொழும்பு: நாளை தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானை இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது இலங்கை. பிப்ரவரி 15-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் நிதி இழப்பு, பொருளாதார வீழ்ச்சி உட்பட பல்வேறு இழப்புகளை இலங்கை எதிர்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சுற்றுலா துறையில் இதன் தாக்கம் பெரிய அளவில் எதிரொலிக்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆட்டம் நடைபெறவில்லை என்றால் விமான டிக்கெட் முன்பதிவு, தங்கும் விடுதிகளின் முன்பதிவு ரத்தாகும். அது தங்கள் நாட்டின் சுற்றுலா துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பிரேமதேசா கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி உள்ளது. அதனால் ஆட்டத்தை நடத்த நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இழப்புகள் இலங்கைக்கு மட்டுமல்லாது தொடரில் பங்கேற்றுள்ள பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தொடரை வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக சர்வதேச நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கிய போது தங்கள் அணி பல்வேறு முறை அங்கு பயணித்து, கிரிக்கெட் விளையாடியதாக இந்த கடிதத்தில் இலங்கை குறிப்பிட்டுள்ளதாக தகவல்.
பாகிஸ்தான் புறக்கணிப்பு முடிவின் பின்னணி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்.7) தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் தங்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டுமென வங்கதேச அணி, ஐசிசி-யை நாடியது. அது முடியாத காரணத்தால் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என ஐசிசி அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து வங்கதேசத்துக்கு ஆதரவாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உடனான லீக் ஆட்டத்தை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இது தங்கள் தேசத்தின் அரசு எடுத்த முடிவு என தெரிவித்தது.

More Stories
முகத்தில் படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ் – நடந்தது என்ன?
டி20 உலகக் கோப்பை: ஹேசில்வுட் விலகல்..! சிக்கலில் ஆஸ்திரேலியா!