சென்னை: “ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது” என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு
காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று (செப்.7) பேரவையில் பதில் அளித்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியது. இந்தச் சூழலில் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர். அது தொடர்பாக பேரவையில் அவர்கள் குரல் எழுப்பிய நிலையில் அரசினர் சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தனது பதிலுரையை தொடங்கினார். “ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதன் மூலமாகவோ, தொழிற்சாலைகள் வருவதால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும், பயம் இல்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடுகள் வரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், சுற்றுலா துறை வளரும். அதன் மூலம் பெண்களும், இளைஞர்களும் சுதந்திரமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பங்கேற்பார்கள். அதனால் காவல்துறை என்பது குற்றவாளிகள் மட்டும் கைது செய்யும் அமைப்பு அல்ல. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக அமைதிக்கும், முதலீட்டு சூழலுக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் அடித்தளமாக விளங்கும் முக்கிய அமைப்பாகும்.
சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல் துறை உற்ற நண்பராக இருக்கும். அதுவே சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற எதிரியாகவும் இருக்க வேண்டும். காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவலர்கள் எந்தவித அச்சமும், இடையூறும் இன்றி தங்கள் பணியை நேர்மையாக மேற்கொள்வதற்கான சூழலை இந்த அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது.
முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என எந்தவித அரசியல் அதிகாரத்துக்கும் காவல் துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தேவை இல்லாத தலையீடுகள் இருக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே இந்த அரசின் நிலைப்பாடு.
அவையின் உறுப்பினர்கள் பலரும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். அரசை குறை கூறும் வகையிலான கருத்துகளை கூட மக்களின் பாதுகாப்பை குறித்த அந்த கருத்துகளை இந்த அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்து கொள்கிறது. அதன் உண்மைத்தன்மையை பரிசீலித்து ஏற்க வேண்டியதை ஏற்பதில் எந்தவித பாகுபாடும் காட்ட மாட்டோம்.
தமிழ் மரபில் நல்லாட்சிக்கும், நீதிக்கும் மிக உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று நமது திருவள்ளுவர், அன்றே யாரிடமும் சார்பு இல்லாமல் நன்றாக ஆராய்ந்து நடுநிலை உடன் நீதி வழங்குவதே முறையான ஆட்சி என்று கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜர் நேர்மையான நிர்வாகத்தையும், முன்னாள் முதல்வர் அண்ணா மக்கள்நல ஆட்சியை வலியுறுத்தினார், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஏழை எளிய மக்களின் நலனை வலியுறுத்தினார்.
இந்த ஆளுமைகளின் சிந்தனைகள் ஒருங்கிணைத்து பார்க்கும் போது காவல் துறை அதிகாரத்தின் அடையாளம் இருக்க கூடாது. அது மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும்.
குற்றத்தை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது.
பெண்களை ஆபாசமாகப் பேசினால்… அண்மைக்காலமாக தமிழகத்தில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது. வன்ம நதி ஓடுகிறது. இந்த நதிகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவது, மூன்று அர்த்தத்தில் பேசுவதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுகின்றனர். இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். அப்படிப் பேசுவதற்கு முன் தங்கள் வீட்டுப் பெண்களை நினைத்து பார்க்க வேண்டும் ” என்று முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.

More Stories
தென் மாவட்டங்களில் நடந்த மல்டிலெவல் மார்க்கெட்டிங் மோசடி: பேரவையில் அமைச்சர் விளக்கம்
‘திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதாக அடிக்கடி கூறுவதா?’ – தவெகவுக்கு அதிமுக கண்டனம்
“மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும்” – பேரவை பதிலுரையில் விஜய் ஆவேசம்