புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சுமித்ரா என்ற பெண்மணி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) எல்பிஜி உருளைகள் நிரப்பும் ஆலையில் ‘ரீஃபில்லிங் ஹெல்ப்பர்’ பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், பெண்களால் கனமான எல்பிஜி சிலிண்டர்களை தூக்க முடியாது எனக் கூறி, அவருக்குப் பணி நியமனம் மறுக்கப்பட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த முடிவைக் கடுமையாகக் கண்டித்த உச்ச நீதிமன்றம், பெண்களால் எல்பிஜி சிலிண்டர்களை தூக்க முடியாது என்ற தவறான அனுமானம் குறித்து காட்டமாகக் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து கூறுகையில், “பெண்களால் எல்பிஜி உருளைகளைத் தூக்க முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வீடுகளில் ஆண்கள் இல்லாத நேரத்தில், நாள்தோறும் எல்பிஜி உருளைகளைத் தூக்குவதும் அதை மாற்றுவதும் பெண்கள் தான். அப்படியிருக்க, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்குப் பணி மறுக்கப்பட்டது பெண்மைக்கே இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும்” என்று கடுமையாக சாடியது.
1988-ம் ஆண்டு தொடங்கிய இந்த நீண்டகால சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, சுமித்ரா பணி ஓய்வு பெறும் வயதைக் (63 வயது) கடந்துவிட்டார். எனவே, பணியில் அமர்த்த முடியாது என்பதால், அவருக்குப் பண ரீதியிலான இழப்பீடு வழங்குவதே சரியான தீர்வாக இருக்கும். எனவே, சுமித்ராவுக்கு ஒரே தவணையாக ரூ.12 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு ஐஓசி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

More Stories
“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம்” – பிரதமர் மோடி பெருமிதம்
திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் விநியோகம்: சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது
இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’ – டாக்டர் ரெட்டீஸுக்கு விநியோக உரிமை