
மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ மேம்பாலத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை: மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்.16-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். ராஜீவ் காந்தி சாலையானது, மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது.
இச்சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங் கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே, இந்தச் சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி செல்வதற்கு, சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ்காந்தி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் வகையிலும் இந்த ‘எல்’ வடிவ மேம்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அடையாறு பகுதியிலிருந்து, கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்கு தடையின்றிச் செல்ல முடியும்.
இந்தப் பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வளைவுப் பகுதியில் பயமின்றி பயணிக்கலாம். இருப்பினும், வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே ‘எல்’ வடிவமேம்பாலப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இந்த ‘எல்’வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தின் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தை பிப்.16-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்” என்று தெரிவித்தார்.

More Stories
“இப்படிப்பட்ட காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோ வைரல்
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் ஹிந்துக்களை மிஞ்சாது: ஓவைசி
விமானங்களின் தரப் பரிசோதனை: 754-ல் கோளாறானவை 377 – மத்திய அரசு தகவல்