மதுரை: ‘இது சாதாரண தேர்தல் அல்ல, மதுரையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை தீர்மானிக்கப்போகும் முக்கியமான ஜனநாயக தருணம்’ என்று அனைத்து முக்கியக் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் கூறிச் சென்றனர்.
ஆனால், அவர்கள் வெற்றி பெற்ற பிறகு தங்கள் பதவிகளை தக்கவைப்பதற்கு காட்டிய ஆர்வத்தில் சிறிதுகூட, மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு காட்டவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
கடந்த ஆட்சிகளில் சென்னை, கோவை, சேலம், திருச்சி போன்ற மாநகரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மதுரைக்குக் கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம், தென் மாவட்ட மக்கள், தொழில்முனைவோரிடையே நீண்ட காலமாக உள்ளது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகும், கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வழக்கம்போல் நடைமுறைக்கு வராமல் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளன. மேலும், புதிய திட்டங்களும் வரவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான மதுரை-தூத்துக்குடி பெருவழிச்சாலை திட்டம் 2013-ல் அறிவிக்கப்பட்டு தற்போது வரை கிடப்பில் உள்ளது.
சென்னை, கோவையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய நிலையில், அடுத்த மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும். மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ‘பஸ் போர்ட்’ திட்டம் தற்போது வரை தொடங்கப்படவில்லை.
தேசிய மருந்துசார் ஆராய்ச்சி நிறுவனம் (நைப்பர்) மதுரை உள்பட 8 இடங்களில் தொடங்க மத்திய அரசு அறிவித்தது. தற்போது வரை இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆட்சியில் முன்வைத்தோம். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை ஏற்படுத்தி 2-வது தலைநகருக்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
மதுரை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி சங்கத் தலைவர் பாலமுருகன் கூறியதாவது: மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஒரு சிறப்பு நோக்க அமைப்பை (எஸ்பிவி) உருவாக்க வேண்டும்.
மதுரை சர்வதேச விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கிறோம். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு பேசி, ஆசியான் நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்வதற்கான ஒரு நிறுத்தமாக மதுரையை மாற்ற வேண்டும்.
மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட முக்கிய ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை கையாள தனியாக ஒரு மாநில அமைச்சரை நியமிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் படிப்புகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஓர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை மதுரையில் நிறுவ வேண்டும். மேலும், தொடக்க நிறுவன ஊக்குவிப்பு மையங்களை (இன்குபேஷன் சென்டர்ஸ்) அமைக்க வேண்டும் என்றார்.

More Stories
மேற்கு வங்கத்தில் தவெக கிளை துவக்கம்: அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை விரிவுபடுத்த திட்டம்
புதுக்கோட்டை: பூட்டிய வீட்டில் சுதாரித்த 3 சிறுவர்களால் தடுக்கப்பட்ட பெரும் தீ விபத்து
“ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர், அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு மனு