
சென்னை: கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை.
இதனால் மும்பை, கோலாலம்பூர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், துபாயிலிருந்து வந்த 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தன.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானங்களை பெங்களூரு, கோவை, திருப்பதி ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பினர்.
அதேபோல் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கோவை, திருவனந்தபுரம், இலங்கை உள்ளிட்ட 12 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின்னர் தாமதமாக தரையிறங்கின.
சென்னையிலிருந்து பெங்களூர், ஹைதராபாத், மும்பை, அந்தமான், திருச்சி, டெல்லி, துர்காபூர், புனே, கொல்கத்தா, கோவை, துபாய், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு புறப்படும் 21 விமானங்கள் கடுமையான பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை விமான நிலையத்தில் மூடுபனி காரணமாக மொத்தமாக 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
காலை 9 மணிக்கு மேல் பனிமூட்டம் குறைந்ததால், விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. பெங்களூரு, கோவை, திருப்பதி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.

More Stories
அனுமதி பெறாத கொடிக் கம்பங்கள் அகற்றக் கோரிய வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்
தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்