ராமநாதபுரம் மாவட்டம், இரட்டையூரணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இத்திட்டத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளை ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனிக்குமார் செய்திருந்தார்.
முகாம் தொடக்கத்தின்போது லேசாகத் தொடங்கிய மழையானது, ஆட்சியர் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கனமழையாக மாறியது. இருப்பினும், சற்றும் தாமதிக்காமல் முகாமில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்ட ஆட்சியர், அங்கு தமக்காகக் காத்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அப்போது, வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிச் குழந்தைகளிடம் கனிவாக உரையாடிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த பூமியில் பணிபுரிவதை முன்னிட்டு, பள்ளி வளாகத்திற்குள் வாழை மரக்கன்றுகளை நட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இவர் ஆட்சியராகப் பொறுப்பேற்றது முதல், பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் முகாமிற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களுடன் திரண்டிருந்தனர். பொதுமக்களின் மனுக்களை மிகுந்த கனிவுடன் பெற்றுக் கொண்ட ஆட்சியர், மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அங்குள்ள அதிகாரிகளுக்குக் கண்டிப்பாக அறிவுறுத்தினார்.
முகாம் நிறைவடைந்து ஆட்சியர் தனது வாகனத்திற்குத் திரும்பியபோது மழை கொட்டித் தீர்த்தது. அப்போது, தான் வைத்திருந்த குடையைப் பிடித்தபடி, தன்னுடன் வந்த உதவியாளரையும் (டவாலி) அந்தச் சிறிய குடைக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அவருடன் ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனி குமாரும் உடனிருந்தார்.
பதவி உயர்வுகளைக் கடந்தும் தனது எளிமையான மனிதநேயத்தால் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் காட்டிய இந்தச் செயல், முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

More Stories
15-10-2026
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம்