புதுடெல்லி: அமித் ஷாவை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் இன்று இதற்கான தீர்ப்பினை வழங்கியது.
2018, மே 8 அன்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பெங்களூருவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்போதைய பாஜக மாவட்ட துணைத் தலைவரும் சுல்தான்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான விஜய் மிஸ்ரா, 2018, ஆகஸ்ட் 4 அன்று ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 2023, நவ.27 அன்று நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, 2024, பிப்.20 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்து ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார்.
இந்த வழக்கில் அக்.12 அன்று வாதங்கள் முடிவடைந்த நிலையில், இறுதித் தீர்ப்பு அக்.26 அன்று வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது. நீதிபதி சுபம் வர்மா தீர்ப்பளிக்க இருந்ததை முன்னிட்டு, ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி இருந்தார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தனது தீர்ப்பினை வழங்கிய நீதிபதி சுபம் வர்மா, 2018ம் ஆண்டின் கிரிமினல் அவதூறு வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் ராகுல் காந்தியை விடுவித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘வாய்மைமே வெல்லும். அவதூறு வழக்கில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சுல்தான்பூர் எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் விடுவித்துள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் லாக்னோ சென்ற ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சுல்தான்பூர் சென்றார். வழியில் ராகுல் காந்தியின் வாகனத்துக்குப் பின்னால் சென்ற கான்வாய் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. 4 கார் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கின. இவற்றில் பயணித்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர். எனினும், இந்த விபத்தில் இருந்து எவ்வித பாதிப்பும் இன்றி ராகுல் காந்தி தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
உ.பி.-யில் ராகுல் காந்தியுடன் சென்ற வாகனம் விபத்து – பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் காயம்
மீண்டும் தேர்தலில் வெற்றி: பிரேசில் அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வாராணசியில் விமானப் படை சாகசத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி