February 11, 2026

எஸ்ஐஆர்: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இன்றே கடைசி!

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இன்றே கடைசி நாளாகும்.

voter list - file photo

வாக்காளர் பட்டியல் – பிரதி படம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (பிப். 10) முடிகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,43,76,756-ஆக குறைந்தது.

நீக்கப்பட்ட 97.38 லட்சம் வாக்காளர்களில் இடம் பெயர்ந்தவா்களாக 66,44,881 பேரும், உயிரிழந்தவா்களாக 26,94,672 பேரும், இரட்டைப் பதிவாளர்களாக 3,98,278 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

இதனிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயா்களைச் சேர்க்கவும், 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக பெயர்களைச் சேர்க்கவும் கடந்த டிச. 19-ஆம் தேதி முதல் ஜன. 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களும் உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிமொழி சான்றுடன் சமர்ப்பிக்க ஜன. 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிதாக பெயர்களைச் சேர்க்க படிவம் 6-ஐயும், இடமாற்றம் செய்ய விரும்புவர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து அளித்தனர்.

வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயர்களைச் சேர்க்க இரு முறை சிறப்பு முகாம்கள் நடத்தபட்டன. தொடர் விடுமுறைகள் வந்த காரணத்தால் பெயரைச் சேர்ப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தொடர்ந்து, ஜன. 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சோ்ப்பு பணியை ஜன. 30-ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மீண்டும் 10 நாள்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (பிப். 10) முடிகிறது.

புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Spread the love