November 15, 2026

கழுகுமலையில் இன்று தாரகாசூரன் சம்ஹாரம்

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்த சஷ்டி விழாவில் இன்று தாரகாசூரன் சம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தென் தமிழகத்தின் எல்லோரா என்றும், தென்பழநி என்றும் அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கழுகாசலமூர்த்தி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்து வருகிறது. மேலும் வள்ளி, தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் உலா வருதலும் நடந்து வருகிறது.

விழாவின் 5ம் நாளான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்மனை எழுந்தருளச் செய்யும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து கழுகாசலமூர்த்தி, வள்ளி- தெய்வானையுடன் வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து மதியம் 12 மணியளவில் தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது முருகப்பெருமானின் தூதர்கள் 3 முறை தாரகாசூரனிடம் பேசும் நிகழ்ச்சி, தொடர்ந்து பூஞ்சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி வரும் சுவாமி கழுகாசலமூர்த்தி தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி, கழுகுமலை கழுகாசலமூர்த்தி ஸ்தலத்தில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கழுகாசலமூர்த்திக்கும், அம்மன்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி அன்னவாகனத்தில் திருவீதியுலா வருதல் நடைபெறுகிறது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி- தெய்வானை அம்மன்களை எழுந்தருளச் செய்யும் பூஜைகள் நடக்கிறது.

மதியம் 12 மணியளவில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை வழிபாடுகள் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு வீரவேல் ஏந்தி சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களம் வருதல், 5 மணிக்கு கோயில் தெற்கு வாசல் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் செய்து வருகிறார்.

Spread the love