ஓய்வு பெறும் EPFO உறுப்பினர்கள் தங்களது PF சேமிப்பை மொத்தமாக ஒரேமுறை எடுக்காமல், மாதாந்திரம், காலாண்டு அல்லது அரையாண்டுத் தவணைகளில் பெறும் Systematic Withdrawal Plan (SWP) முன்மொழிவுக்கு EPFO மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஓய்வுக்குப் பிந்தைய செலவுகளுக்கு வருமான ஆதரவளிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது. திட்டம் தன்னார்வமானது; மீதமிருக்கும் PF தொகை தொடர்ந்து வருமானம் ஈட்டும்.
உதாரணமாக, PF கணக்கில் ₹5 லட்சம் இருப்பவர், திட்ட விதிகளின்படி தேர்ந்தெடுத்த தவணை முறையில் தொகையைப் பெறலாம். உறுப்பினர் தவணை பெறும் காலத்தில் உயிரிழந்தால், மீதமுள்ள தொகையைப் பெறவோ, தவணைகளைத் தொடரவோ நியமனதாரர் அல்லது தகுதியுள்ள குடும்பத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
தொடக்கத்தில், 55 வயதைக் கடந்தும் PF கணக்கில் ₹5 லட்சத்துக்கு மேல் சேமிப்பும் கொண்ட சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் பயனடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. EPFO சுமார் 8 கோடி உறுப்பினர்களின் PF சேமிப்பை நிர்வகித்து வருகிறது.
திட்டம் எப்போது தொடங்கும்?
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு EPF திட்டத்தில் தேவையான திருத்தங்கள் அறிவிக்கப்பட வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதே தவிர, அதிகாரப்பூர்வ தொடக்கத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வேலை இழப்பு, திருமணம், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்கு விதிகளின்படி PF-ல் இருந்து பகுதி தொகை பெறும் வசதி ஏற்கெனவே உள்ளது. ஆனால், வேலை இழந்தவர்களுக்கும் இந்தப் புதிய SWP பொருந்துமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கான விதிகள் குறித்த விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்
“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” – முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்