கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை விழா விமரிசையாக நடைபெறும். நடப்பாடுக்கான விழா கடந்த நவ.15-ம் தேதி இரவு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
கடந்த நவ.16-ம் தேதி காலை கொடியேற்றம், தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளுதலும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. தொடர்ந்து நவ.17-ம் தேதி முதல் நவ.26-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
பிரதான நிகழ்ச்சியான நவ.24-ம் தேதி இன்று காலை 7 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வள்ளி-தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இதில் கலந்துகொண்டு ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா, தீபக்காட்சி ஆகியவையும் நடைபெறுகிறது.
நாளை (நவ.25-ம் தேதி) படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரியும், நாளை இரவு 7.30 மணிக்கு அவரோகணமும், நாளை மறுநாள் (நவ.26-ம் தேதி) இரவு வள்ளி, தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தலும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருக்கார்த்திகை விழாவையொட்டி, கோயில் பகுதியில் ஏடிஎஸ்பி வீரபாண்டி, டிஎஸ்பி ஆர்.சர்மு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More Stories
“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” – முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
“யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்” – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கில் நீதிபதி கருத்து