February 13, 2026

T20 WC 2026: கொழும்பு பிட்சில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் ஸ்பின் பவுலிங் அச்சுற்றுத்தலா?

T20 WC 2026: கொழும்பு பிட்சில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் ஸ்பின் பவுலிங் அச்சுற்றுத்தலா?

Updated on: 

12 Feb 2026, 12:27 pm

இம்மாதம் 15-ம் தேதி கொழும்புவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டியில் பாகிஸ்தானின் ஸ்பின் பவுலர்கள் இந்திய அதிரடி பிக் ஹிட்டர்களுக்குக் கடும் பிரச்சனையாக இருப்பார்கள் என்று தெரிகிறது. சமீபகாலங்களில் இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்குக்கு எதிரான பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. மாறாக பாகிஸ்தான் ஸ்பின் பவுலிங் இந்திய பிக் ஹிட்டர்களைக் கடுமையாகச் சோதிக்கும் திறமை கொண்டதாக உள்ளது.

புதிர் பவுலர் அப்ரார் அஹமது. ஆஃப் ஸ்பின்னர் சயீம் அயூப், உஸ்மான் தாரிக், ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக உள்ள ஷதாப் கான், முகமது நவாஸ் ஆகியோர் இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தலே. இதனை கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் கவனமாகப் பரிசீலித்து உத்திகளை வகுக்க வேண்டும். இவர்களை எப்படி வென்றடக்குவது என்பதை சிறப்புக் கவனம் கொள்வது இந்திய அணிக்கு நல்லது என்றே தோன்றுகிறது.

யுஎஸ்ஏ அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கும் பவுலிங்கும் இந்திய அணி அந்த அணிக்கு எதிராக ஆடியதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. மேலும் கொழும்பு பிட்ச். பொதுவாகவே இலங்கையில் பிட்ச்கள் மந்தமாக ஸ்பின்னுக்குச் சாதகமாக பந்துகள் மட்டைக்கு எளிதில் வராமல்தான் அமைந்திருக்கும்.

பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹின் அஃப்ரீடி அன்று ஒன்றுமே பயனில்லாமல் போய் 4 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கிய நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, 16 ஓவர்களை ஸ்பின்னர்களைக் கொண்டே வீசினார். அதனால்தான் 191 ரன்கள் சேசிங் அமெரிக்காவுக்குக் கடினமானது.

பாகிஸ்தானின் 3 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள் 2 ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் மூலம் ஆப்கான் அணியின் ஸ்பின் வரிசை போல் பலமாக உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி 271 ரன்களைக் குவித்த போது அங்கே பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை தன் ஸ்பின்னினால் முடக்கி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 198 ரன்களை தடுத்த பாகிஸ்தான் சுமார் 15 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்து ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தோற்கடித்தனர்.

அன்று இந்த உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக 7 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களைக் கொண்டே பாகிஸ்தான் கைப்பற்றியது, அதுவும் 105 ரன்களுக்கு. இந்திய ஸ்பின்னர்கள் 13 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்று வீழ்த்துகையில், பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் வெகு அருகே 14 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற வீதத்தில் வீழ்த்தி வருகின்றனர்.

குறிப்பாக பவர் ப்ளேயில் பாகிஸ்தான் அதிகமாக ஸ்பின் பந்து வீச்சை கடந்த 6 மாதங்களில் பயன்படுத்தி வந்துள்ளமை இந்தியாவுக்கு எதிராகவும் கடைப்பிடிக்கப்படலாம். மேலும் இந்திய அணியின் ஸ்பின் வீச்சிற்கு எதிரான பேட்டிங்கும் போதாமையாகவே உள்ளது.

கடந்த 6 மாதங்களில் பவர் ப்ளேயில் பாகிஸ்தான் கைப்பற்றிய 51 விக்கெட்டுகளில் 10 விக்கெட்டுகளை ஸ்பின்னர் சயீம் அயூப்தான் எடுத்துள்ளார். அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் ஆகிய மூன்று டாப் 3 அதிரடி அச்சுறுத்தல் பேட்டர்களை பவர் ப்ளேயில் பாகிஸ்தான் காலி செய்து விட்டால் இந்திய அணியின் முதுகெலும்பே காலியாகிவிடும். ஆகவே பாகிஸ்தானின் ஸ்பின் பந்து வீச்சை முறியடிக்கும் உத்திகளை கம்பீர் வகுத்துக் கொள்ள வேண்டும்.

Spread the love