
ரியான் பராக் ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார். இதற்கு முன்பாக நீண்ட கால கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் ரியான் பராக் முழு நேர கேப்டனாகிறார்.
அந்த பரிமாற்றத்தில், சிஎஸ்கே-யின் பிரதான ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்துள்ளனர்.
சிறிய வயதில் பெரிய பொறுப்பு:
24 வயதான ரியான் பராக், ராஜஸ்தான் அணிக்காக ஏற்கனவே கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். 2025 சீசனில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக எட்டு போட்டிகளை தவறவிட்டபோது, அந்த போட்டிகளில் அணியை பராக் வழிநடத்தினார்.
அந்த எட்டு போட்டிகளில் ராஜஸ்தான் வென்றது இரண்டு மட்டுமே என்றாலும், தனிப்பட்ட முறையில் பராக் சிறப்பாக விளையாடினார். சராசரியாக 38.57 ரன்கள் எடுத்த அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் 95 ரன்கள் எடுத்தது அவரது கேப்டன் காலத்தின் முக்கியமான இன்னிங்ஸ் ஆகும்.
அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் ‘சுவர்’ ராகுல் திராவிட் 2025 சீசன் முடிந்தபின் விலகியதால், ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் மட்டுமல்ல, புதிய பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டனர். அணியின் இயக்குநராக செயல்படும் குமார் சங்கக்காரா பல வீரர்களுடன் நேர்காணல் நடத்திய பிறகே ரியான் பராகை கேப்டனாக தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 சீசனில் 14 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் கீழ் நிலையில் முடித்தது ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவானது. இம்முறை அதனை மாற்றியமைக்க உத்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானதிலிருந்து பராக் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காகவே விளையாடி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களிலும் அனைத்து போட்டிகளிலும் அவர் இடம்பிடித்தார். குறிப்பாக 2024 சீசன் அவரது சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த சீசனில் 573 ரன்கள், 52.09 சராசரி, 149.21 ஸ்ட்ரைக் ரேட் ஆகியவை அவரது திறமையை நிரூபித்தன.
மொத்தத்தில், 84 ஐபிஎல் போட்டிகளில் 1566 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மிடில்-ஆர்டரில் நிலையான பேட்டிங்குடன், தேவையான சமயங்களில் ஸ்பின் பந்துவீச்சையும் வழங்கும் ஆல்ரவுண்ட் திறன் அவரிடம் உள்ளது.
ரியான் பராக் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்; அசாமிலிருந்து ஐபிஎல்-ல் தொடர்ந்து விளையாடும் மிகச் சில வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை பராக் தாஸ் முன்னாள் ரஞ்சித் டிராபி வீரர்; தாயாரான மிது பராக் தேசிய அளவிலான நீச்சல் வீராங்கனை.
உள்நாட்டு கிரிக்கெட்டில் அசாம் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார் பராக். இளம் வயதிலேயே தலைமை பொறுப்பு கிடைத்திருப்பது பராக் மீது நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 2026 சீசனில் அவர் ராஜஸ்தான் அணியை மீண்டும் பிளேஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

More Stories
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர விக்கெட் கீப்பர் விலகல்! ஜிம்பாப்வேவுக்கு பின்னடைவு!
T20 WC 2026: கொழும்பு பிட்சில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் ஸ்பின் பவுலிங் அச்சுற்றுத்தலா?
T20 WC 2026: கோட்டை விட்ட ஆப்கன்; 2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி