February 17, 2026

பாக். சரிவைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிய மோசின் நக்வி! – T20 WC 2026

மோசின் நக்வி

இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அப்போது போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியின்றி இந்திய அணியின் வசம் சரணடைந்ததை அவர் முழுதும் இருந்து காண விரும்பவில்லை என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டக் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கத்திலேயே தடுமாறியது. பவர் பிளே ஓவர்களிலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால், இலக்கை நோக்கி நகரும் முயற்சி ஆரம்பத்திலேயே சிக்கலாக மாறியது.

நடு ஓவர்களில் ரன்களை விரைவாக சேர்க்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் பார்ட்னர்ஷிப்களை கட்டியெழுப்ப முடியாமல் தேக்கம் கண்டது. தேவையான ரன் விகிதம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது. இறுதியில், கீழ்வரிசை வீரர்கள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலை உருவானபோது, வெற்றி வாய்ப்பு மிகத் தூரமாகிப் போனது. 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இந்நிலையில், விஐபி பிரிவில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி போட்டி முடிவதற்கு முன்னரே வெளியேறியதாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. போட்டி இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடந்த அவரது வெளியேற்றம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இப்போட்டி முன்பே அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பரபரப்பை சந்தித்திருந்ததால், இந்த சம்பவம் மேலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிசிபி தலைவர் என்ற முறையில் நக்வி எடுத்த நிலைப்பாடுகள் ஏற்கனவே விவாதத்திற்கு உள்ளாகியிருந்தன. ஐசிசி உடனான ஆலோசனைகள் மற்றும் போட்டிப் புறக்கணிப்பு குறித்தப் பேச்சுகள் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இறுதியில் போட்டி நடைபெற ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அதன் பின்னணியில் இருந்த பதற்றம் முழுமையாக அடங்கவில்லை.

இந்திய அணியின் பந்து வீச்சு கட்டுப்பாட்டுடன் இருந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் சுருங்கியது. இறுதியில், இந்தியா மீண்டுமொரு ஐசிசி டிராபி வெற்றியை பாகிஸ்தானுக்கு எதிராகப் பதிவு செய்து டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவின் வெற்றி ஆதிக்கத்தை 8-1 என்று உயர்த்தியது.

Spread the love