February 17, 2026

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிவரும் உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 5,40,511 மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டது.

ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன. மகளிருக்காக இளஞ்சிவப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது.

19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் ,

தமிழகத்தில் உள்ள 1048 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசி வருகிறார்.

Spread the love