ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், ரஷிய இறக்குமதி 40 சதவிகிதம் குறைந்துள்ளதைப் பற்றி…

ரஷிய அதிபர் புதின் – பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், ரஷிய இறக்குமதி 40 சதவிகிதம் குறைந்துள்ளது.
ரஷியா – உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது 25 சதவிகித வரியையும், கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்தார். இது இந்திய சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் ரஷியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி 40.48 சதவிகிதம் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4.81 பில்லியன் டாலர்களாக இருந்த இறக்குமதி, இந்தாண்டு ஜனவரியில் 2.86 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
ரஷியாவிலிருந்து 80 சதவிகித இறக்குமதி கச்சா எண்ணெய் பொருள்களை மட்டுமே இந்தியா சார்ந்திருக்கிறது. மீதமுள்ள 20 சதவிகிதத்தில் கச்சா எண்ணெய் தவிர, நிலக்கரி, கோக், சில பெட்ரோலியப் பொருள்கள், உரம், இரும்பு, செய்தித்தாள்கள், பருப்பு வகைகள், முத்து போன்றவையும் இறக்குமதி செய்கிறது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 4.73 பில்லியன் டாலர்களாக உச்சத்தில் இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, செப்டம்பரில் 3.32 பில்லியன் டாலர்களகக் குறைந்தது.
இது கிட்டத்தட்ட 30 சதவிகித குறைவு. ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்ததுபோலவே இறக்குமதியில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012-2013 ஆம் ஆண்டில், தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவிலிருந்து இந்தியா 14.10 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருந்தது. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் வெனிசுவேலா கச்சா எண்ணெயின் இறக்குமதி படிப்படியாகக் குறைந்தது.
இதன் விளைவாக 2021-2022 ஆம் ஆண்டில் வெனிசுவேலாவில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவு பூஜ்ஜியமானது.
அதே நேரத்தில் 2011 – 2012 ஆம் ஆண்டில் பூஜ்ஜியமாக இருந்த இந்தியாவிற்கான ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி 2022-2023 ஆம் ஆண்டில் திடீரென உச்சம் பெற்று 31 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. 2023-24-ல் 46.49 பில்லியன் டாலர்களாகவும், 2024-25 ஆம் ஆண்டில் 50.28 பில்லியன் டாலர்களாகவும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு
மார்ச்சில் 2 முறை தமிழகம் வரும் மோடி.. எல். முருகன் தலைமையில் மாநில சிறப்புக் குழு.. மோடி போடும் திட்டம் என்ன?
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: வரவேற்பும் அதிருப்தியும் – ஒரு பார்வை