
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணியில் இரு தரப்பினரிடையே கல்வீச்சு நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள நியூ டவுனில் நேற்று முன் தினம் இரவு சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணி நடைபெற்றது. கிலா காளி பகுதியில் உள்ள மசூதி அருகே பேரணி சென்றபோது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தில் வந்த இளைஞர்களும் கற்களை வீசியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாகல் கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கோயல் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்தனர். இரு தரப்பினர் மீதும் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நியூ டவுன் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அங்கு சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகல் கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கோயல் கூறுகையில், “பாகல்கோட்டையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவத்துக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சிசிடிவி காட்சிகளின்படி 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முதல்வர் சித்தராமையா கூறுகையில், “பாகல்கோட்டையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மத ரீதியான மோதல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது” என்றார்.

More Stories
மே.வங்க எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடையை களைந்து போராட்டம்
ஏஐ மாநாட்டு பிரமுகர்களுக்கு பிரதமர் சிறப்பு விருந்து