
சென்னை: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.24) 3-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அந்த வாக்குறுதிகள் குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
1. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
2. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
4. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும்.
5. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
6. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதியில் * முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000-மாக உயர்வு
* வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி
* வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
* ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் நிவாரணம்
* சிறுபான்மையினருக்கான அறிவிப்புகளாக, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

More Stories
கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு: 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்