
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் தேவபிரதா மொகந்தி. நிலக்கரி விற்பனைக்கு லைசென்ஸ் பெற்ற ஒரு வர்த்தகரிடம் கடந்த செவ்வாய்க் கிழமை ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது விஜிலென்ஸ் அதிகாரிகள் மொகந்தியை கையும் களவுமாகப் பிடித்தனர். உடனடியாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீடுகளில் ஒரே நேரத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டு அலமாரிகளில் கட்டுக்கட்டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடி பணத்தை செவ்வாய்க்கிழமை இரவு விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மொகந்தியின் அலுவலக அறை மேசை டிராயரில் ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன் புவனேஸ்வரில் 2 அடுக்கு மாடி கொண்ட வீட்டுக்கான ஆவணங்கள், 130 கிராம் தங்கம் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுவரை பிடிபட்டதிலேயே இதுதான் அதிகபட்ச தொகை என்று விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மொகந்தி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்.7-ல் ஒடிசாவின் கஞ்ஜம் மாவட்டத்தில் நீர்ப்பாசன துறை உதவி பொறியாளர் வீட்டில் ரூ.3.4 கோடியை விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தது தான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
92 சதவீத வாக்குப் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு
இந்து கடவுள்களை அவமதிப்பதா? – பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு
மேற்கு வங்க தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை