
ஸ்ரீநகர்: அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் தலைவர் காமேனி கடந்த 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் பயணம் செய்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவராவதற்கு முன்பே அயத்துல்லா அலிகாமேனி கடந்த 1980-ம் ஆண்டு காஷ்மீர் வந்துள்ளார். அப்போது காஷ்மீரில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையே பகைமை நிலவி வந்தது. அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூதியில் நடைபெற்ற வெள்ளிக் கிழமை தொழுகையில் பங்கேற்று 15 நிமிடங்கள் உரையாற்றினார். சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார்.
அதன் பின்பே காஷ்மீரில் சன்னி மசூதியில் ஷியா பிரிவினரும், ஷியா மசூதியில் சன்னி பிரிவினரும் தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1981ம் ஆண்டு காமேனி பெங்களூரு மற்றும் அலிபூருக்கு வந்தார். அலிப்பூர் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கு ஈரான் அரசு உதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையையும் காமேனி தொடங்கி வைத்தார். அலிப்பூர் முஸ்லிம் இளைஞர்கள் பலர், ஈரானில் தற்போது மதக் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரான் சென்றபோது, தனது இந்திய பயணத்தை அவரிடம் அயத்துல்லா அலி காமேனி நினைவு கூர்ந்தார். காமேனி, காந்தியின் சுதந்திர போராட்டத்தை பாராட்டினார். அணி சேரா இயக்கத்தின் தலைவராக நேரு இருந்ததையும் அவர் பாராட்டியுள்ளார்.
ஈரானில் உள்ள சீக்கியர்கள் அளித்த புத்தகங்கள் மூலம் சீக்கிய மதம் பற்றி அறிந்து கொண்டதாக கூறிய காமேனி, பல மதத்தினர் வாழும் இந்தியாவில் ஒற்றுமை நிலவுவதையும் பாராட்டியுள்ளார். ஈரான் தலைவராக அயத்துல்லா அலி காமேனி பதவியேற்ற பின்பு அவர் இந்தியா வரவில்லை. ஆனால், பல கூட்டங்களில் இந்திய தலைவர்களை சந்திக்கும்போது, தனது இந்திய பயணம் பற்றி காமேனி நினைவு கூர்ந்தார்.

More Stories
சோமாலிய கடற்கொள்ளையரிடம் சிக்கிய 3 கப்பல்களை விடுவிக்க இறுதிகட்ட பேச்சு
வங்கக் கடலில் 2 படகுகள் கவிழ்ந்ததில் ரோஹிங்கியா அகதிகள் 500 பேர் உயிரிழப்பு?
கடந்த 2 மாதங்களில் படகுகள் கவிழ்ந்து 500 ரோஹிங்கியா அகதிகள் பலி: ஐ.நா கவலை