March 9, 2026

அன்று கண்ணீர்… இன்று மகிழ்ச்சி… டி20 உலகக் கோப்பை சாம்பியன் இந்தியாவின் தருணங்கள்!

அன்று கண்ணீர்... இன்று மகிழ்ச்சி... டி20 உலகக் கோப்பை சாம்பியன் இந்தியாவின் தருணங்கள்!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 கோப்பையை 3-வது முறையாகக் கைப்பற்றியது.

இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துஅணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன. பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது. ஆட்டநாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டிக்குப் பின்னர் இந்திய வீரர் திலக் வர்மா கூறியதாவது: “டி20 கோப்பையை தக்கவைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் கோப்பையை வெல்வதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் தயாராகி வந்தோம். அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோப்பையைக் கைப்பற்றியுள்ளோம்.

தேவையான நேரத்தில் நமது வீரர்கள் ஃபீல்டிங்கில் அபார திறமையை வெளிப்படுத்தி னார்கள். இன்றைய தினத்தில் நாங்கள் சிறந்த ஃபீல்டிங்கை செய்தோம் என்று நான் கூறமாட்டேன்.இந்தப் போட்டியில் சில நல்ல கேட்ச்களை பிடித்து எதிரணி வீரர்களை வெளியேற்றினோம். இறுதிப் போட்டியில் வென்றது மிகவும் மகிழ்ச்சி. அடுத்த 2 நாட்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் உற்சாகத்திலேயே இருப்போம்.”

அர்ஷ்தீப் சிங்: “டேரில் மிட்செல்லுக்கு வீசும்போது பந்து அவரைத் தாக்கிவிட்டது. இதனால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்க ஓடினேன். கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் திளைப்பது அருமையாக உள்ளது. இன்னும் 2 முதல் 4 நாட்களுக்கு இந்த உற்சாகம் இருக்கும்.

ஏராளமான மேட்ச் வின்னர்கள் அணியில் உள்ளனர். எனவே, இது சிறந்த இந்திய அணியாக உள்ளது. நாம் 250 ரன்களுக்கு மேல் குவித்து விட்டு, எதிரணியை 250 ரன்களுக்குள் கட்டுப் படுத்துவதுதான் பந்து வீச்சாளர்களின் வேலை.”

LATEST

ஷிவம் துபே: “போட்டியில் என்னுடைய பங்கு என்பது எப்போதும் பெரிய அளவிலான சிக்ஸர்களை விளாசுவதுதான். இந்தப் போட்டியின் முதல் நாளில் இருந்தே என்னுடைய பங்காக அதை நான் நினைக்கிறேன். எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அந்தப் பணியை நான் செய்து வருகிறேன். இந்தத் தொடரிலும் பல போட்டிகளின் நான் சிக்ஸர்களை பறக்கவிட்டேன்.

போட்டியில் சிக்ஸர்கள் விளாசுவதில் நான் முன்னேறி உள்ளேன். அதைப் போலவே பந்துவீச்சிலும் முன்னேற்றம் காண முயன்று வருகிறேன். ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பந்துவீச்சில என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இருந்தபோதும், இனி எதிர்காலத்தில் சிறப்பாக பந்துவீச முயற்சி செய்வேன்.”

அபிஷேக் சர்மா: “நான் இந்தத் தொடர்களில் குறைந்த ரன்களில் அவுட்டானபோதும், கேப்டன் சூர்யகுமார் யாதவும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் என் மீது நம்பிக்கை வைத்தனர். இதனால், ஒரு விஷயம் எனக்கு மிகத் தெளிவாக இருந்தது. சிறப்பாக பேட்டிங் செய்வேன் என்று நினைத்தேன். அதைப் போலவே இன்று எனக்கு சிறந்த நாளாக அமைந்தது.

என் மீது எனக்கே சந்தேகம் இருந்தது. ஆனாலும், கேப்டன் என் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து ஆதரவு தெரிவித்தார். நானும் என்னை சந்தேகித்துக் கொண்டிருந்தேன். இது மிகவும் கடினமான தொடராக இருந்தது. இதுபோன்ற பிரச்சினையை இதற்கு முன்பு நான் அனுபவித்ததில்லை.

ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் என்னை மேம்படுத்த நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனாலும் அதுஎனக்கு எளிதாக இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் அணி நிர்வாகம் என்னை ஆதரித்த விதத்தை மறக்கமுடியாது. இந்த அணியை நான் மிகவும் நேசிக்கிறேன்.

இந்தத் தொடரின் நடுவில் நான் உணர்ச்சிவசப்பட்டு பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் பேச விரும்பினேன், அவர்கள் பெரிய ஆட்டங்களை நீங்கள் வெல்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தனர். கடினமான காலங்களிலும் அணி நிர்வாகம் எங்களுக்கு நிறைய ஆதரவளித்துள்ளது.”

வருண் சக்ரவர்த்தி: “கோப்பையை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக 2 டி20 உலக கோப்பைகளை வென்றுள்ளோம். இறுதி ஆட்டத்தில் அபிஷேக் சர்மா விளையாடிய விதம் அருமை. அது எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. இந்தத் தொடரில் எங்களுக்கு (வருண், அபிஷேக்) எதுவும் சரியாக நடைபெறவில்லை என்று பேசிக் கொண்டு இருந்தோம். ஆனாலும், தற்போது உலகக் கோப்பையை வென்றுவிட்டோம்.”

வில்லியம்சன் சாதனை சமன்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற பெருமை கேன் வில்லியம்சன் வசம் இருந்தது. அவர், 29 ஆட்டங்களில் விளையாடி இருந்தார். இந்த சாதனையை தற்போது மிட்செல் சாண்ட்னர் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர் ஆகியோர் தலா 28 ஆட்டங்களில் விளையாடி உள்ளனர்.

2 ஓவர்களில் தேக்கம்: ஒரு கட்டத்தில் இந்திய அணி 15 ஓவர்களில் 203 ரன்கள் குவித்திருந்தது. இதனால் இந்திய அணி 280 முதல் 290 ரன்களை எளிதாக குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16 மற்றும் 17 ஆகிய 2 ஓவர்களிலும் நியூஸிலாந்து அணி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியதால் இந்திய அணியின் ரன் குவிப்பில் சற்று தேக்கம் ஏற்பட்டது.

டாப் 3 அரை சதம்: டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் விளாசினர். டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரை சதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும்.

2 ஓவர்களில் 48 ரன்கள்: டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் 2 ஓவர்களை வீசிய லாக்கி பெர்குசன் 48 ரன்களை தாரை வார்த்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் 2 ஓவர்களில் அதிக ரன்களை தாரை வார்த்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் நடப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியாவின் ஷிவம் துபே 46 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

அன்று கண்ணீர்… இன்று மகிழ்ச்சி…

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டிருந்தது. அந்தத் தொடர் முழுவதும் அபாரமான திறனை வெளிப்படுத்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வலம் வந்திருந்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டி தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. அதே மைதானத்தில் தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது அசத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் சுற்றில் ஓர் அணி விரைவாக 100 ரன்களை எட்டியது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் நியூஸிலாந்து அணி 7.5 ஓவர்களில் 100 ரன்களை குவித்து இருந்தது.

வாரி வழங்கிய லாக்கி பெர்குசன்: டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் 4-வது ஓவரிலும், 12-வது ஓவரிலும் தலா 24 ரன்களை தாரை வார்த்தார். அவரை தொடர்ந்து ஜேம்ஷ் நீஷம் 20-வது ஓவரில் 24 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் அக்சர் படேல் ஆகியோருடன் இணைந்தனர். பென் ஸ்டோக்ஸ் 2016-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், அக்சர் படேல் 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் 24 ரன்களை வழங்கியிருந்தனர்.

தொடர்கிறது ‘நம்பர் 2 முத்திரை’ – நியூஸிலாந்து அணி கடந்த 11 வருடங்களாக ஐசிசி நடத்தும் தொடர்களில் 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் அந்த அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது.

50 ஓவர், டி 20 வடிவிலான போட்டிகளில் அந்த அணி 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி இம்முறை இந்தியாவிடம் வீழ்ந்துள்ளது. இதனால் நியூஸிலாந்து அணி மீது உள்ள ‘நம்பர் 2’ முத்திரை தொடர்கிறது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண 86,824 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

தேசிய கீதம் பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி: அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் மைதானத்தில் திரண்டிருந்தனர். அப்போது தேசிய கீதத்தை பிரபல பின்னணிப் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடினார்.

68 வயதாகும் கவிதா கிருஷ்ணமூர்த்தி மைதானத்துக்கு வந்து தேசிய கீதத்தை பாடியது இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தமிழ், இந்தி உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பின்னணிப் பாடல்கள் பாடியவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி. தமிழரான இவர், வயலின் இசைக்கலைஞரான எல்.சுப்பிரமணியத்தைத் திருமணம் செய்துகொண்டார்.

Spread the love