March 14, 2026

‘‘இன்று என்ன நடக்கிறது என்று பாருங்கள்…’’ – ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்!

வாஷிங்டன் டி.சி.: “ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம். இன்று என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்” என்று ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதல் 13-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கோ குறிவைப்பதற்கோ எதுவும் இல்லை என்றும் எப்போது வேண்டுமானாலும் போரை தான் முடித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஈரான் அதிபர் பெசஷ்கியான், போரை முடிவுக்குக் கொண்டு வர இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட மூன்று நிபந்தனைகளை விதித்தார்.

மேலும், இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதோடு, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு கடும் நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில், “ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் முழுமையாக அழித்து வருகிறோம். ஆனால், தோல்வியடைந்த நியூ யார்க் டைம்ஸ் செய்திகளைப் படித்தால், நாங்கள் வெற்றி பெறவில்லை என்று நீங்கள் தவறாக நினைப்பீர்கள். ஈரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் வான்படை இனி இல்லை. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் மற்ற ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.

அவர்களின் தலைவர்கள் பூமியில் இருந்து அழிக்கப்பட்டு விட்டனர். எங்களிடம் இணையற்ற ராணுவ சக்தி உள்ளது, எண்ணிலடங்கா ஆயுதங்கள் உள்ளன, மேலும் நிறைய நேரமும் உள்ளது. இன்று அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக உலகம் முழுவதும் அப்பாவி மக்களை கொன்று வருகின்றனர். இப்போது நான், அமெரிக்காவின் 47-வது அதிபராக, அவர்களை அழித்து வருகிறேன். அவ்வாறு செய்வது எத்தனை பெரிய கவுரவம்!’’ என தெரிவித்துள்ளார்.

Spread the love