March 17, 2026

துபையில் டிரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!

துபை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

துபை விமான நிலையம் அருகில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் இதுவரை 1,800 ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது மற்ற எந்த நாடுகளின் மீது ஈரான் நடத்தியத் தாக்குதல்களை விட அதிகமாகும்.

பெரும்பாலான தாக்குதல்கள் வான்வழி பாதுகாப்பு மூலம் முறியடிக்கப்பட்ட போதும் அங்கு விமானப் போக்குவரத்து போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

துபை விமான நிலையம் அருகே கடந்த புதன் அன்று (மார்ச் 11) விழுந்த 2 டிரோன்களால் 4 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர், மீண்டும் ஒரு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் விமான நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துபை சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக துபை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரான் நாட்டுத் தலைவர் கமேனி கொல்லப்பட்டப் பிறகு, அமெரிக்க நிலைகளை மட்டுமல்லாமல் குடியிருப்புப் பகுதிகள், முக்கிய நினைவுச்சின்னங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் ஈரான் குறிவைத்து தாக்கிவருகிறது.

இந்தப் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 6 பேர் பலியானதாக அமீரக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love