மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 29-ம் தேதி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜியோஸ்டார் சார்பில் நடைபெற்ற ‘கேம் பிளான்’ நிகழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறியதாவது: கேமரூன் கிரீன் மிகவும் திற மையானவர், அவரிடம் வெற்றி பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய வீரராகவும், ஆந்த்ரே ரஸ்ஸலுக்கு இணையான மாற்று வீரராகவும் அவர் இருப்பார். கேமரூன் கிரீன் ஆறு அடி உயரம் கொண்ட வலுவான வீரர். அவர், பவுன்ஸர் மற்றும் யார்க்கர் பந்துகளை வீசக்கூடியவர். பேட்டிங்கில் பந்தை மைதானத்துக்கு வெளியே அவரால் மிக எளிதாக அடிக்க முடியும், அதே சமயம் அவர், ஒரு முறையான பேட்டரும் கூட. ஒட்டுமொத்தத்தில் கேமரூன் கிரீன் கொல்கத்தா அணியை சமநிலையை அடையச் செய்கிறார்.
ஆனால், சமீபகாலமாக அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் தொடரில் அவர், ரூ.25.2 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதால், அந்த ‘ப்ரைஸ் டேக்’ அழுத்தமும் இருக்கும். அவரது, தோள்களில் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. அணி அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும். அவர் இதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
கொல்கத்தா அணி நிர்வாகம் ஃபின் ஆலன், டிம்ஷெய்ஃபெர்ட் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக விளையாடும் லெவனில் சேர்க்கும் வழியைக் கண்டறிந்தால், அது அந்த அணிக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இது அவர்களின் பேட்டிங்கை மிகவும் வலிமையாக்கும். தற்போதைய டி20 கிரிக்கெட் விளையாடப்படும் முறைக்கு, இவர்கள் இருவரும் இன்னிங்ஸைத் தொடங்குவது கச்சிதமாக இருக்கும். இவர்கள் இருவரும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடக்கூடியவர்கள்.
பேட்டிங் வலுவாக உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சுத்துறை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சில முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் ஏலப்பட்டியலில் விற்கப்படாத வீரர்களில் இருந்து அனுபவம் வாய்ந்தவரை தேர்வு செய்து, பந்துவீச்சு துறையை பலப்படுத்துவது அவசியம். நான் கொல்கத்தா அணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தால், ஈடன் கார்டன் மைதான பராமரிப்பாளரிடம் ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்குமாறு கேட்டுக்கொள்வேன்.
ஏனெனில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்ற வீரர்கள் கிடைத்தது கொல்கத்தா அணி செய்த பாக்கியம். தற்போதைய டி20 கிரிக்கெட்டில் இருக்கும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவர்களும் அடங்குவர். வருண் மற்றும் நரைன் ஆகிய இருவருமே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இருக்க வேண்டும்.
அவர்களுக்குச் சாதகம் இல்லாத ஆடுகளங்களில் விளையாடினால், உங்கள் அணியின் அந்த இரண்டு பீரங்கிகளையும், உங்களின் ‘சூப்பர் பவர்’ திறனையும் நீங்கள் இழக்க நேரிடும். அவர்கள் எந்த வகையான ஆடுகளத்திலும் சிறப்பாகப் பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவர்கள் தான். ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வெற்றி பெற வேண்டுமானால், வருண் மற்றும் நரைன் இருவரும் அதிரடியாக செயல்பட வேண்டும். இந்த இரு வீரர்களையும் மனதில் வைத்தே ஆடுகளம் தயார் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
அதிவேகமாக 900 கோல்கள்..! மெஸ்ஸி உலக சாதனை!
‘குடி’யை நிறுத்திவிட்டேன் – சாஹல் ‘ஓபன் டாக்’
அனைத்து ஐபிஎல் ஆட்டங்களிலும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹர்ப்ரீத் விளையாட வேண்டும்: சஞ்சய் பங்கார் வலியுறுத்தல்