September 22, 2026

எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து  நாளை முதல் வழக்கமன புறநகர்
மின்சார ரயில் சேவைகள் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மறுசீரமைப்பு பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டதால், முன்கூட்டியே சேவை
தொடங்கப்படுகிறது.
எழும்பூரில் நடைமேடை 10, 11இல் பணிகள் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 20
முதல் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அனைத்து பணிகளும் திட்டமிட்ட
நேரத்துக்கு முன்பாகவே முடிக்கப்பட்டதால் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ரயில் சேவை
தொடங்குகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புறநகர் பயணிகளுக்கு ஒரு பெரும் நிவாரணமாக, தெற்கு ரயில்வேயின் சென்னை
கோட்டம், திட்டமிடப்பட்டிருந்த 05.04.2026 என்ற தேதிக்கு முன்னதாகவே, 03 ஏப்ரல்
2026 (வெள்ளிக்கிழமை) அன்று 00:00 மணி முதல் சென்னை எழும்பூர் நிலையத்தில்
புறநகர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. நடைமேடை 10 மற்றும் 11-ல்
புனரமைப்புப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டதன் காரணமாக இந்த முன்கூட்டியே
சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
 நடைமேடை 10 மற்றும் 11-ல் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 20
பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை ரயில் பாதை முடக்கம்/மின்சார முடக்கம்
அனுமதிக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பணிகளும் திட்டமிடப்பட்ட காலத்திற்கு
முன்பே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இயல்பான புறநகர்
ரயில் சேவைகள் முன்கூட்டியே மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுக்கும் வகையில்,
அந்த முடக்கம் முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 27 பிப்ரவரி 2026
முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக புறநகர் ரயில் கால அட்டவணை
திரும்பப் பெறப்படுகிறது. 20 பிப்ரவரி 2026-க்கு முன்னர் நடைமுறையில் இருந்த
வழக்கமான புறநகர் ரயில் கால அட்டவணை, வார நாட்கள் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய இரண்டிற்கும் மீண்டும் நடைமுறைக்குக்
கொண்டுவரப்படுகிறது. 
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – அரக்கோணம் வழித்தடத்தில்,
தினசரிப் பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் திறமையான இணைப்பை மீண்டும்
வழங்கும் வகையில், அனைத்து EMU/MEMU சேவைகளும், நிறுத்தங்கள் மற்றும்
இயக்க முறைகள் உட்பட, தடைக்கு முந்தைய ஏற்பாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் அதே வேளையில்
உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சென்னை கோட்டத்தின் பல்வேறு
துறைகளின் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்தப் பணிகள்
முன்கூட்டியே நிறைவு செய்திருப்பது பிரதிபலிக்கிறது. இந்தத் தடைக்காலத்தில்
பொறுமையுடனும், புரிதலுடனும், தொடர்ச்சியான ஆதரவுடனும் இருந்த
பயணிகளுக்குத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தனது மனமார்ந்த

நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. பயணிகள் 03 ஏப்ரல் 2026 (வெள்ளிக்கிழமை)
அன்று 00:00 மணி முதல் வழக்கமான கால அட்டவணையைப் பின்பற்றுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Spread the love