சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடையில் வழக்கம்போல வந்து செல்லும் புறநகர் மின்சார ரயில்கள். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 42 நாட்களுக்குப் பிறகு வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டது. ரயில்கள் இயக்கம் சீரானதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரம்மாண்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் இதற்கான பணிகள் தொடங்கியதால், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் கடந்த பிப்.19-ம் தேதி முதல் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து 45 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதாவது, 204 ரயில் சேவைகளில் இருந்து 115 சேவைகளாக குறைக்கப்பட்டன. மேலும், பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் இயக்கப்பட்டன.
இதனால், இரு மார்க்கங்களிலும் எழும்பூரை நோக்கிச் செல்லும்போது, அதாவது, சேத்துப்பட்டு, பூங்கா ரயில் நிலையப் பகுதியில் ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக 2 அல்லது 3 நிமிடங்களில் செல்ல வேண்டிய ரயில் 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமானது.
பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்பவர்களும், வெளியூர் விரைவு ரயில்களைப் பிடிப்பதற்காக எழும்பூர் வருபவர்களும் இதனால் மிகவும் அவதியடைந்தனர்.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11-வது நடைமேடையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிந்ததை அடுத்து 42 நாட்களுக்குப் பிறகு, நேற்று முதல் வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்கள் இயக்கம் சீரானதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நேற்று இந்த வழித்தடத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் ஒரு சில ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது.
இன்று முதல் 7-ம் தேதி வரையில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி இடையே இயக்கப்படும் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

More Stories
தலைமை தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு
ஜி.கே.வாசன் கிறிஸ்தவர்களுக்கு புனித வெள்ளி வாழ்த்து
அரசியல் தலைவர்கள் வருகை: புதுச்சேரியில் பள்ளிகள் 4 நாட்கள் விடுமுறை.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்