தஞ்சாவூர்: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் தனது பதவியை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் ராஜினாமா செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 45 வது வார்டில் இருந்து மாமன்ற உறுப்பினராக கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சண். ராமநாதன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாமன்ற உறுப்பினர்களால் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மேயராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு 2027 மார்ச் மாதம் வரை இவரது பதவிக்காலம் இருந்த நிலையில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று காலை அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பாக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆணையர் அறையில் தனது மாமன்ற உறுப்பினர் பதவியையும், மாநகராட்சி மேயர் பதவியையும் ராஜினாமா செய்து தனித்தனி கடிதங்களில் கையெழுத்திட்டு ஆணையர் கண்ணனிடம் வழங்கினார். அப்போது இதுவரை எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தமைக்கு நன்றி என நா தழு தழுக்க பேசினார்.
இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அங்கிருந்த வாட்ச்மேன் ரவிச்சந்திரன் என்பவர் வழக்கம் போல அவருக்கு வணக்கம் செலுத்தினார். இதையடுத்து அவருக்கு ஒரு சால்வையை அணிவித்து, “இதுவரை என்னை வரவேற்ற உங்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்,” என அவரைக் கட்டித் தழுவி இருவரும் கண்ணீர் மல்க ஒருவருக்கொருவர் ஆறுதல் தெரிவித்துக் கொண்டனர்.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்