பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே…
இந்தியா முழுவதும் பிஹு, விஷு, வைசாகி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் கோலம் பூண்டுள்ள இவ்வேளையில், மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில் புதுப்பித்தல் உணர்வு நம்மை நிரப்புவது போல, இந்திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்றுப் பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டது. குறிப்பாக, ஏப்ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள் மற்றும் ஏப்ரல் 14 அன்று பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், சமத்துவம் நோக்கிய நமது பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 16 அன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதே இந்தக் கூட்டத்தொடரின் முதன்மையான நோக்கமாகும். இதை ஒரு சட்டமியற்றும் கடமையாக மட்டும் பார்க்காமல், தேசத்தின் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு புனிதமான வாய்ப்பாக நாம் கருத வேண்டும். இன்று விண்வெளி முதல் பாதுகாப்புப் படைகள் வரை இந்தியப் பெண்கள் நிகரற்ற சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
கல்வி, சுகாதாரம், நிதி உள்ளடக்கத்தில் நாம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் அவர்களின் முன்னேற்றத்துக்கு வலுவான அஸ்திவாரமிட்டுள்ளன. இருப்பினும், நிர்வாகத்திலும் கொள்கை முடிவெடுக்கும் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பு இன்னும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற அளவில் அமையவில்லை என்பது நிதர்சனம். அதிகாரத்தில் பெண்கள் பங்கேற்கும்போது, அவர்கள் ஒரு புதிய பார்வையையும், சமூகத்தின் ஆழமான சிக்கல்களைத் தீர்க்கும் தெளிவான அனுபவங்களையும் கொண்டு வருகிறார்கள்.
2029 மக்களவைத் தேர்தலும், அதற்கு முன்பாக வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களும் மகளிர் இட ஒதுக்கீட்டுடன் நடைபெறச் செய்வது நமது ஜனநாயகக் கடமையாகும். கடந்த பல தசாப்தங்களாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த இலக்கை நாம் அடைய முடியாமல் போனது. ஆனால், செப்டம்பர் 2023-ல் நாடாளுமன்றம் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது எனது வாழ்வின் மிகச் சிறந்த தருணமாகும். அதை முழுமையாகச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நொடி தாமதமும், நமது ஜனநாயக வலுவூட்டலில் ஏற்படும் தாமதமாகும்.
நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய பெண் உறுப்பினர்களின் கனவை நிறைவேற்றவும், சமூக நீதியை நிலைநாட்டவும் இதுவே சரியான தருணம். இது ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தின் அல்லது அரசியல் கட்சியின் வெற்றி அல்ல; இது ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றி. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி எல்லைகளைக் கடந்து, தேச நலன் கருதி இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒற்றுமையே இந்தியாவின் பலம். அந்த ஒற்றுமையின் மூலம், நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த மாற்றத்தை இப்போது நனவாக்குவோம். இந்தியப் பெண்களின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், வலிமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய புதிய இந்தியாவைக் கட்டமைப்போம். நமது மகளிர் சக்தியை வலுப்படுத்துவது, எதிர்காலத் தலைமுறைக்கு நாம் செய்யும் மகத்தான தொண்டாகும்.

More Stories
“எனக்கு நிதிஷ் குமார் நிலை ஏற்படாது” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி
மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி அளித்த 6 வாக்குறுதிகள்
புதுச்சேரியில் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல்: தடியடி நடத்தி கலைத்த போலீஸார்