September 23, 2026

திருப்புல்லாணி அருகே வாகன சோதனையில் ரூ.96 ஆயிரம் பறிமுதல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்புல்லாணி சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது நத்தக்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ரூ.96 ஆயிரம் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பின்னர் ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். 

 தேர்தல் காலத்தில் ரூ.50,000-க்கு மேற்பட்ட பணத்தை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், அதற்கான உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறினால் பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது .

Spread the love