April 13, 2026

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.13) பவுனுக்கு ரூ.320 என குறைந்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என குறைந்தது குறிப்பிடத்தக்கது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலி சர்வதேச கச்சா எண்ணெயின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பின்னர் கச்சா எண்ணெய் விலை சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல். இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 மற்றும் பவுனுக்கு ரூ.320 என விலை குறைந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கும், ஒரு பவுன் ரூ.1,12,480-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.15,338 மற்றும் ஒரு பவுன் ரூ.1,22,704-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 என குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை ஆகிறது.

Spread the love