April 17, 2026

வர்த்தக சிலிண்டர் முறைகேடாக ரூ.7,000-க்கு விற்பனை: கோவையில் தொடரும் தட்டுப்பாடும் பாதிப்பும்

கோவை: கோவையில் முறைகேடாக வணிக காஸ் சிலிண்டர்கள் ரூ.7 ஆயிரம் வரை விற்பதால், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

வணிக ரீதியாக இயங்கும் தெருவோர தேநீர் கடைகள் தொடங்கி, நடுத்தர உணவகங்கள், உயர் தர உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வரை காஸ் சிலிண்டர் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வணிக காஸ் சிலிண்டருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வெளிச்சந்தையில் முறைகேடாக விற்கப்படும் சிலிண்டரின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவையை சேர்ந்த வணிகர்கள் கூறியதாவது: ஒரு கடை நடத்துபவர் ஒரு சிலிண்டரை பதிவு செய்து வாங்கி 5 நாட்களுக்குள் தீர்ந்துவிட்டால், அடுத்ததாக சிலிண்டரை முறைப்படி பதிவு செய்தால் கிடைப்பதில்லை.

வணிக காஸ் சிலிண்டர் உடனடியாக கிடைக்காததால், பலரும் தொய்வின்றி தொழில் செய்ய வேண்டிய நெருக்கடியால் வேறு வழியின்றி வெளிச்சந்தையில் மிக அதிகவிலைக்கு வணிக காஸ் சிலிண்டரை வாங்க வேண்டியுள்ளது.

பல இடங்களில் ஏஜெண்டுகள் போல் சிலர் கமிஷன் பெற்றுக்கொண்டு சிலிண்டர்களை வழங்கி வருகின்றனர். தற்போது ஒரு வணிக காஸ் சிலிண்டர் ரூ.5,500-ல் தொடங்கி ரூ.7 ஆயிரம் வரை முறைகேடாக விற்கப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் சம்பளம், கடை வாடகை உள்ளிட்டவற்றை கணக்கில் வைத்தால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலையே ஏற்படுகிறது. உணவகம் தொடங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழில் செய்ய முடியாத நிலையே உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொழில்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூறும்போது, “நாங்கள் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்து தங்கி பணியாற்றுகிறோம். எங்களுக்கு தேவையான உணவு சமைக்க வீட்டு சிலிண்டர் பயன்படுத்துகிறோம்.

5 கிலோ சிலிண்டர்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். பல இடங்களில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர்களை நிறுவன முதலாளிகளே ஏற்பாடு செய்து தருகிறார்கள். வீட்டு சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து தேவைக்கு ஏற்ப வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர்களை சமையலுக்கு பயன்படுத்துகிறோம். கடைகளில் சிலிண்டர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டன. பரோட்டா, சப்பாத்தி ரூ. 5 – ரூ. 20 வரை உயர்ந்துள்ளன.

அதேபோல் தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் உயர்ந்துவிட்டன. சிலிண்டர் தட்டுப்பாடு அனைத்து தரப்பிலும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது” என்றனர்.

சின்னவேடம்பட்டி தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் தேவகுமார் கூறியதாவது: வணிக காஸ் சிலிண்டர்கள் சந்தையில் ரூ.1850-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், வெளிச்சந்தையில் ரூ.3500, ரூ.5000 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.7000 வரை விற்கப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. பவுடர், கோட்டிங் உட்பட பல்வேறு தொழில்நிலைகளிலும் பாதிப்பு உள்ளது. அதுவும்கூடுதல் விலைக்கு வாங்குபவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து சிலிண்டர்களை விநியோகம் செய்கிறார்கள். புதியவர்களுக்கு உடனடியாக கிடைப்பதில்லை.

தொழிலாளர்களுக்கு பணி நிறுவனங்களில் உள்ள உணவகங்கள் இன்னும் முழுவீச்சில் இயங்கவில்லை. வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், மூன்று மடங்குக்கு மேல் சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிகாரிகளின் தொடர்ச்சியான நடவடிக்கை இருந்தாலும், வெளிப்படையான விநியோக நடவடிக்கையே நிரந்தரத் தீர்வாக இருக்கும், என்றார்.

உரிய நடவடிக்கை

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வீட்டு சிலிண்டர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து தொய்வின்றி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. வணிக ரீதியான பயன்பாட்டுக்கு தொழில் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களிடம் காஸ் பெற்று வந்த நிலையில், தற்போதைய தட்டுப்பாட்டை காரணங்காட்டி அந்த காஸ் நிறுவனங்கள் மூடியுள்ளன.

இதனால் அங்குள்ள வாடிக்கையாளர்களும் எங்களை நாடி வருகிறார்கள். ஆனால் எங்களது பல ஆண்டுகால வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பிறகே, புதிய வாடிக்கையாளர்களுக்கு காஸ் தர முடியும்.

முறைகேடாக அதிக விலைக்கு காஸ் சிலிண்டர்கள் விற்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love