இந்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர் சுஜித் கோஷ் அருகில் சீனா வெளியுறவுத் துறை எல்லை விவகார இயக்குநர் ஹு யான்சி
பெய்ஜிங்: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 35-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்தில் சுமார் 45 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது. கல்வான் மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் எழுந்தது.
எனினும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு போர் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியது. அப்போது முதல் இரு தரப்பு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் 35வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இந்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர் சுஜித் கோஷ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். சீன தரப்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை எல்லை விவகார இயக்குநர் ஹுயான்சி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சீனா உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. எல்லையில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதரப்பிலும் முழு திருப்தி தெரிவிக்கப்பட்டது.
எல்லை நிர்ணயம், எல்லைப் பகுதி மேலாண்மை, பரஸ்பர ஒருங்கிணைப்பை மேம்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. எல்லை விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் தொடர்பில் இருக்க உறுதி மேற்கொள்ளப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

More Stories
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பேர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் காயம்
பிரதமர் மோடியின் ‘ராஜதந்திர’ சாதனைகள்: பிரிக்ஸ் 2026-ல் இந்தியா பெற்றது என்ன?
‘சத்தியத்தின் வெற்றி’ – ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்