பிரதமர் மோடி அரசின் 12 ஆண்டு சாதனையைக் கொண்டாடும் பாஜக
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு அடுத்த வாரம் 12 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதை பாஜக விமரிசையாகக் கொண்டாட உள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்ற பாஜக அரசின் பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். இவர் தொடர்ந்து 12 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து வருகிறார். அடுத்த வாரம் 12 ஆண்டுகளை அவர் நிறைவு செய்கிறார். இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், நாடு தழுவிய மக்கள் தொடர்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த 12 ஆண்டுகளில் எட்டப்பட்ட சாதனைகளை விவரிக்கும் ஐந்து கையேடுகள் வெளியிடப்பட உள்ளன.
பிரதமர் மோடி அரசின் சாதனைகள் பொதுமக்கள் முன் வைக்கப்பட உள்ளன. இவை அனைத்தும் முக்கியத் தலைப்புகளின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் ஐந்து கையேடுகளும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ‘முதன்மையாக தேசம்’ என்ற தலைப்பிலான கையேடு, கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து எடுத்த முக்கிய முடிவுகளை முன்னிலைப்படுத்துகிறது. அதேபோன்று, ‘தேசக் கட்டுமானம்’ என்ற கையேடு, உள்கட்டமைப்புத் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைக்கும்.
‘தேசிய வலுவூட்டல்’ என்ற கையேடு, இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் துல்லியத் தாக்குதல்களை முன்னிறுத்திக் காட்ட உள்ளது. இன்று முதல் ஜூன் 21, 2026 வரை, நாடு முழுவதும் பல்வேறு மக்கள் தொடர்பு, சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இக்காலகட்டத்தை நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் மக்கள் நலனின் 12 ஆண்டுகள் என பாஜக கொண்டாடுகிறது.
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஜூன் 8 முதல் 12 வரை ஊடகச் சந்திப்புகளும் நடைபெற உள்ளன. இவற்றில் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்று அரசின் சாதனைகளையும் வளர்ச்சிப் பயணத்தையும் எடுத்துரைப்பார்கள். இந்தப் பிரச்சாரத்தில் மரம் நடுதல், தூய்மைப் பணிகள் உள்ளிட்டவையும் பிரதமர் மோடியின் பெயரில் நடைபெறும்.
இந்த கால கட்டத்தில் நாடு முழுவதும் மக்கள் நல முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இவற்றில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத், பி.எம்.ஸ்வநிதி, பி.எம்.சூர்ய கர் மற்றும் பிற திட்டங்களில் பதிவு செய்யப்படுவார்கள். பயனாளிகளை இம்முகாம்களுக்கு அழைத்துச் செல்வதில் கட்சியின் அமைப்பு ரீதியான பிரிவுகள் தீவிரப் பங்கு வகிக்க வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள், அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிலரங்குகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இப்பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமன்றி, ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வை உருவாக்கும் உறுதிப்பாட்டை விரைவுபடுத்துவதிலும் பாஜக முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.

More Stories
ஜூன் 5 | உலக சுற்றுச்சூழல் தினம்.. கடந்த 200 ஆண்டுகளில் மனிதர்களால் நேர்ந்த பாதிப்பு!
ஒற்றுமை சிலை வளாகத்தில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் திட்டம்
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராகிறார் மோடி