June 12, 2026

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்குவதை உறுதி செய்ய உரிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மே 10-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது, தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த் தாய் வாழத்து பாடி துவங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதா கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடி துவங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவதாக குற்றமசாட்டியுள்ளார்.

மேலும், அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28ம் தேதி பிறப்பித்து சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை துவங்க எந்தத் தடையையும் விதிக்கவில்லை; தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல; அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்; எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் மத்திய – மாநில அரசுகள் எட்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.

Spread the love