செய்யாறு மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடும் மக்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.முதலமைச்சரிடம் பேசிவிட்டு நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதி அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், திருவண்ணாமலையில் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மேல்மா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒன்பது கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டையின் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதவ் அர்ஜூனா விவசாயிகள் சந்திப்பு
மேல்மா, அத்தி, நர்மாபள்ளம், குரும்பூர், தேத்துறை, நெடுங்கல், வடஆலப்பிறந்தான், வீரபாக்கம் மற்றும் இளநீர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை தொழில் வளர்ச்சிக்காக அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அரசு தரப்பில், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் பெரும்பாலும் தரிசு நிலங்கள் என்றும், அவை விவசாய பயன்பாட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், இதை விவசாயிகள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
இந்தியா கூட்டணியில் திமுக இல்லை! தவெக நிலை என்ன?
இந்த நிலங்கள் வளமான நன்செய் நிலங்களாக இருப்பதுடன், நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் பல்வேறு பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் ஆண்டுக்கு மூன்று முறை வரை விளையும் திறன் கொண்டவை என அவர்கள் தெரிவிக்கின்றனர். பல தலைமுறைகளாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் தங்களின் வாழ்வாதார நிலங்களை தொழிற்சாலை அமைப்பதற்காக ஒப்படைக்க முடியாது என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
செய்யாறு மேல்மா சிப்காட் போராட்டம்
செய்யாறு பகுதியில் ஏற்கனவே மாங்கால் பகுதியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சிப்காட் தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், அங்கு இன்னும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலையில், மேலும் புதிய விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படலாம் என்றும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை மேய்ச்சல் பகுதிகளை பாதிக்கும் என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது. இந்த திட்டத்திற்கு முந்தைய ஆட்சிக் காலத்திலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. போராட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட அருள் ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
ஆதவ் அர்ஜூனா கொடுத்த உறுதி!
தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு அதிகரித்ததால் திட்டம் ஒரு கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர், அருள் ஆறுமுகம் தவெக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தினார். வாக்கு எண்ணிக்கையின் இறுதிவரை கடுமையான போட்டி நிலவிய நிலையில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எ.வ.வேலு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், விவசாயிகளின் நலனே அரசின் முன்னுரிமை என தெரிவித்தார். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், கீழ்மட்டத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் லஞ்ச பிரச்சினைகளை ஒழிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.மேலும், செய்யாறு சிப்காட் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும், திருவண்ணாமலை மாவட்டத்தின் எதிர்காலம் மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.

More Stories
ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு கூடாது: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்
61 நாள் தடைக்காலம் நாளை நிறைவடைகிறது: மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு