புதுடெல்லி: உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
செய்தித்தாளில் உள்ள அச்சுமையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. எனவே உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து எப்எஸ்எஸ்ஏஐ நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: உணவுப் பொருட்கள் மற்றும் அலங்கார கேக்குகளில் மறைந்திருக்கும் உலோக ஊசிகளை பொதுமக்கள் விழுங்கிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் அவர்களின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே உணவுப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட கேக்குகள், கேக் பெட்டிகள், இனிப்பு பெட்டிகள், தின்பண்ட பொட்டலங்கள், உணவு பார்சல்கள், உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எப்எஸ்எஸ்ஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More Stories
இந்திய மாலுமிகளின் கப்பல்களில் தொடர்ந்து தாக்குதல்: அமெரிக்க தூதரை 2-வது முறை அழைத்து வெளியுறவுத் துறை கண்டனம்
அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடக்கம்: பாதுகாப்பு குறித்து அமித் ஷா ஆய்வு
மேற்கு வங்க தேர்தல் தோல்வியின் தாக்கம்: காங்கிரஸுடன் ஐக்கியமாகும் திரிணமூல், என்சிபி கட்சிகள்?