இந்திய ராணுவத்தில் பணியாற்றி, பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ‘அசோக் சக்ரா’ விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம்- வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட தாம்பரம் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் த.சரத்குமார், மேஜர் முகுந்தின் குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, சாலைப் பெயர் மாற்றத்துக்கான அரசின் இறுதி ஒப்புதலை விரைந்து பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் முகுந்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்தச் சிறப்பான முயற்சிக்குத் தங்களது நன்றியையும் அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கிடையே, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்ந்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஓராண்டுக்கு முன்பே அப்போதைய தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் மனு அளித்திருந்தனர். அதில், கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் சுப்பராயன் பூங்காவில் மேஜர் முகுந்தின் நினைவாக அவரது மார்பளவு சிலை ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்ற தாம்பரம் மாநகராட்சிக்கு முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவும் அறிவுறுத்தியிருந்தார்.
சிலை அமைக்க கோரிக்கை: தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலரின் வழிகாட்டுதலின் படி, தாம்பரம்-வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை எனப் பெயர் சூட்ட மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாலைப் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இதே வேளையில், தங்களால் கடந்த ஓராண்டாக வலியுறுத்தப்பட்டு வரும் சுப்பராயன் பூங்காவில் மார்பளவு சிலை அமைக்கும் கோரிக்கை யையும் இந்த அரசு விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் 5-வது டெர்மினல் அமைக்கப்படும்: இயக்குநர் தகவல்
“அதிமுக 31 தொகுதிகளில் வென்றது பாமக போட்ட பிச்சை” – பழனிசாமி மீது சி.வி.சண்முகம் கடும் விமர்சனம்