February 11, 2026

T20 WC 2026: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதித்தது எப்படி?

T20 WC 2026: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதித்தது எப்படி?

இஸ்லாமாபாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற்று வருகின்​றன. கொழும்பு நகரில் வரும் 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதும் வகை​யில் அட்​ட​வணை இருந்​தது.

இதற்​கிடையே இந்​தி​யா​வில் பாது​காப்பு அச்​சுறுத்​தல் இருப்​ப​தால், டி20 கிரிக்​கெட் உலகக் கோப்​பை​யில் விளையாட தங்​கள் அணி இந்​தி​யா​வுக்கு வராது என வங்கதேசம் அறி​வித்​தது. இதனால், அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்​லாந்து அணியை சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் சோ்த்​தது.

வங்​கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்​கும் வகை​யில், இந்தியா​வுக்கு எதி​ராக வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் நடை​பெறும் ஆட்​டத்​தைப் புறக்​கணிப்​ப​தாக பாகிஸ்​தான் அறிவித்திருந்தது.

இந்த நிலை​யில், நேற்று முன்​தினம் பாகிஸ்​தானுக்கு பயணம் செய்த ஐசிசி துணைத் தலை​வர் இம்​ரான் கவாஜா, லாகூரில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத் தலைவ​ரான மொஹ்சின் நக்​வியை சந்​தித்து ஆலோசனை நடத்தி​னார்.

பேச்​சு​வார்த்​தை​யின் போது பாகிஸ்​தான் வாரி​யம் தரப்பில் சில கோரிக்​கைகள் முன்​வைக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்து வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு எந்​த​வித தடை​யும் விதிக்​கப்​ப​டாது என்​றும், 2028-2031 சுழற்சி​யில் ஆடவருக்​கான யு-19 உலகக் கோப்பை தொடரை நடத்​தும் உரிமை வழங்​கப்​படும் என ஐசிசி தரப்பில் உறுதி அளிக்​கப்​பட்​டது.

ஆனால் அதேவேளை​யில் பாகிஸ்​தானுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்​கப்​பட்​டுள்​ளதா என்​பது குறித்து எந்​த​வித தகவலும் வெளி​யாக​வில்​லை. இதைத் தொடர்ந்து மொஹ்சின் நக்​வி, பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பைச் சந்​தித்து ஐசிசி மற்​றும் வங்​கதேச கிரிக்​கெட் வாரிய அதி​காரி​களு​டன் நடை​பெற்ற பேச்​சு​வார்த்தை குறித்து விளக்​கி​னார்.

இதற்​கிடையே இலங்​கை, ஐக்​கிய அரபு அமீரகம் மற்​றும் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யங்​கள் பாகிஸ்​தானுக்​குக் கடிதம் மூலம் டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டி​யில் விளை​யாடு​மாறு கோரிக்கை விடுத்​தன.மேலும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க, பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பைத் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார்.

அப்​போது, “இலங்கை மற்​றும் பாகிஸ்​தான் இடையி​லான நீண்ட கால நட்​புறவைக் கருத்​தில் கொண்​டும், சர்​வ​தேச கிரிக்​கெட்​டின் நலன் கரு​தி​யும் இந்​தி​யா​வுட​னான போட்டியில் பங்​கேற்க வேண்​டும்” என்று வலியுறுத்தினார். நட்பு நாடு​களின் கோரிக்​கைகள் மற்றும் ஐசிசி​யின் ஆலோ​சனை​களை ஏற்​றுக்​கொண்ட பாகிஸ்தான் பிரதமர், இறு​தி​யில் இந்​தி​யா​வுடன் விளையாட ஒப்​புதல் அளித்​தார்.

இது தொடர்​பாக பாகிஸ்​தான் அரசு தரப்​பில் திங்​கள்​கிழமை நள்​ளிர​வில் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “பலதரப்பு பேச்​சு​வார்த்​தைகளில் எட்​டப்​பட்ட முடிவு​கள் மற்​றும் நட்பு நாடு​களின் வேண்​டு​கோளைக் கருத்​தில் கொண்​டு, பாகிஸ்​தான் தேசிய கிரிக்​கெட் அணியை பிப்ரவரி 15-ல் டி20 உலகக் கோப்​பை​யில் திட்​ட​மிடப்​பட்ட போட்டிக்​காக களமிறங்​கு​மாறு அறி​வுறுத்தி உள்​ளோம்.

கிரிக்​கெட்​டின் உணர்​வைப் பாது​காப்​ப​தற்​கும், பங்கேற்கும் அனைத்து நாடு​களி​லும் இந்த உலகளா​விய விளை​யாட்டை ஆதரிப்​ப​தற்​கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இந்​தி​யா​வுட​னான போட்​டியை புறக்​கணிப்​பதை முடிவுக்குக் கொண்​டு​ வந்​ததற்​காக பாகிஸ்​தான் கிரிக்கெட் வாரி​யத்​துக்கு சில சலுகைகளை வழங்க ஐசிசி வழங்கி உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுதொடர்​பாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வட்​டாரங்​கள் கூறும்​போது, “ஐசிசி-​யிட​மிருந்து பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் பெற்​றுள்ள சலுகைகள் என்ன என்​பது டி20 உலகக் கோப்பை முடிந்த பின்​னரே பகிரங்கப்படுத்தப்படும்” என்​றன.

ஐசிசி-​யிட​மிருந்து பாகிஸ்​தான் வாரி​யம் பெறும் வருவாயின் பங்கை அதி​கரிக்க நக்வி வலி​யுறுத்​து​வ​தாக ஊகங்​கள் எழுந்​துள்​ளன, ஆனால் அடுத்த நிதிச் சுழற்சிக்கான ஐசிசி வாரி​யத்​தின் ஒப்​புதலுக்​குப் பிறகு தான் இது இருக்​கும் என்​றும் கூறப்​படு​கிறது.

பேச்​சு​வார்த்​தை​யின் போது ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பை, டி 20 உலகக் கோப்​பை, சாம்​பியன்​ஸ்​ டி​ராபி தொடர்​களில்​ இந்​தி​யா – ​பாகிஸ்​​தான்​ அணி​கள்​ நடுநிலையான மை​தானங்​களில்​ விளை​யாடுவது போன்று ஐசிசி டெஸ்​ட்​ ​சாம்​பியன்​ஷிப்​ தொடரிலும்​ விளையாடு​வதற்​​கான வழிகளை கண்​டறிய வேண்​டும்​ நக்​வி வலி​யுறு​த்​தி​ய​தாகவும்​ கூறப்​படுகிறது.

Spread the love