March 21, 2026

“அதிமுகவை எதிர்க்க இயலாமல் ‘டெல்லி அணி’ என திசை திருப்புகிறார் முதல்வர்” – டிடிவி தினகரன்

சென்னை: “அதிமுகவை எதிர்க்க தைரியம் இல்லாமல், ‘டெல்லி அணி’ என்று திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்,” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுவந்த நிலையில் இன்று டிடிவி தினகரன் டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக தலைமையிலான தே.ஜ.கூட்டணி தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட இருக்கிறது. இக்கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கின்றது, நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இருக்கின்றோம் (அமமுக). எனவே அந்த கூட்டணியில் உள்ள பாஜகவின் டெல்லி தலைமை எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த சந்திப்பு நான்கு நாட்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற அழைப்பை பொருத்தே நடக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை, இது அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி மட்டுமே. இதனை ஊடகங்கள் வாயிலாக முதல்வருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்றார்.

மத்திய அரசிடம் நிதியை பெற்றுத் தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை குறித்து பேசிய தினகரன், ”தேர்தல் அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசிடம் எப்படி நிதியை பெற்றுத் தர முடியும் ?.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து கிடைத்த நிதியை திமுக எப்படி சுரண்டியது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவை அகற்ற வேண்டும் என்று வாக்குப்பதிவு நாளுக்காக தமிழக மக்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

அதிமுகவை எதிர்க்க தைரியம் இல்லாமல், ‘டெல்லி அணி’ என்று திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர். இவர்கள் மத்தியில் அத்தனை ஆண்டு காலம் இருந்தும் தமிழக மக்களுக்கு என்று என்ன செய்தார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, இலங்கை தமிழர்களை கொன்று குவிக்கும் போது மத்தியில் அங்கம் வகித்து வாய்மூடி மவுனம் காத்துவிட்டு, என்டிஏ கூட்டணி குறித்து பேச திமுகவினருக்கு தகுதி இல்லை.” என்று டிடிவி தினகரன் கூறினார்.

Spread the love