
இந்தியாவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து, இந்தாண்டு வெளியிட இருக்கும் ஒரிஜினல் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப் படங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
அறிவிக்கப்பட்ட வெப்தொடர்களில் ‘லெகஸி’, ‘லவ்’ ஆகிய தமிழ் தொடர்களும் இடம்பெற்றுள்ளன. ‘லெகஸி’ வெப் தொடரில் மாதவன், கவுதம் ராம் கார்த்திக், ஹரீஷ் உத்தமன், குல்ஷன் தேவய்யா, அபிஷேக் பானர்ஜி, நிமிஷா சஜயன் உள்பட நடித்துள்ளனர். 5 எபிசோடுகளை கொண்ட இத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கியுள்ளார். ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ தயாரித்துள்ள இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் பெரியவர் என்ற கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். தாதாவான அவருக்கு எதிராக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தல் நெருங்கும் போது, தனது சாம்ராஜ்யம், தனது குடும்பம், தான் விட்டுச்செல்ல விரும்பும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அவர் என்ன செய்கிறார் என்று இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘லவ்’ என்ற தமிழ் வெப் தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி வெப் தொடரான இதை சவுந்தரியா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு வெப் தொடரான ‘சூப்பர் சுப்பு’வும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாலிக் ராம் இயக்கிய இத்தொடரில் சந்தீப் கிஷண், மிதிலா பால்கர், முரளி சர்மா, மானசா சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இவை தவிர, கொங்கனா சென் சர்மா நடித்துள்ள ‘அக்யூஸ்டு’, டாப்ஸி பன்னு நடித்துள்ள ‘காந்தாரி’, மாதுரி தீக் ஷித் நடித்துள்ள ‘மா பேஹ்ன்’, சன்னி தியோல், அக்ஷய் கன்னா நடித்துள்ள ‘இக்கா’ உள்பட சில திரைப் படங்களையும் அனில் கபூர் நடித்துள்ள ‘ஃபேமிலி பிசினஸ்’, பரினீதி சோப்ரா நடித்துள்ள ‘தலாஸ்’ உள்பட சில வெப் தொடர்களையும் ‘த கிரேட் கபில் ஷோ’ சீசன் 4, 5 உள்பட சில ரியாலிட்டி ஷோக்களையும் நெட்பிளிக்ஸ் அறிவித்து உள்ளது.

More Stories
ஓடிடி-யில் நேரடியாக வெளியான ‘நீலகண்டா’
தமிழில் திரையிடப்படும் சத்தா பச்சா!
டிடிஎஃப் வாசனின் ஐபிஎல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!