
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் தீப் பகத்
புதுடெல்லி: ‘‘ஆயுதமில்லாமல் திரும்பவும் வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை’’ என்று காஷ்மீரைப் பற்றி முன்னாள் ராணுவ அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரராகப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர் பிரிகேடியர் தீப் பகத். இவர் சமீபத்தில், தான் பணியாற்றிய சோபியான் மாவட்டம் உட்பட பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். அப்போது ஒட்டுமொத்த காஷ்மீர் மாறியுள்ளதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தீப் பகத் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் கமாண்டோ பள்ளி பயிற்சியாளர் உட்பட பல பதவிகளில் பல இடங்களில் பணியாற்றி இருக்கிறேன். குறிப்பாக சோபியான் மாவட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். அங்கு தீவிரவாத தாக்குதல்கள் தினம் தினம் நடைபெறும். இந்த இடத்துக்கு என் வாழ்நாளில் ஆயுதங்கள் இல்லாமல் மீண்டும் திரும்பி வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அந்தளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது.
சோபியானுக்குள் நுழைகிறேன். எந்த ஆயுதமும் என்னிடம் இல்லை, எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஆனால், அப்படியொரு அமைதி நிலவுகிறது. இதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடந்த 90-கள் மற்றும் 2000-ம் ஆண்டுகளில் இங்கு ராணுவத்தில் பணியாற்றியவர்கள் யாரும், ஆயுதங்கள் இல்லாமல் திரும்பி வருவோம் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
சோபியானில் வன்முறைகள் சர்வ சாதாரணம். எல்லை தாண்டிய தீவிரவாத (பாகிஸ்தான்) தாக்குதல் உச்ச கட்டத்தில் இருந்தது. ஆனால் தற்போது இங்குள்ள சூழ்நிலையைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு என்னுடைய பைக்கில் சுற்றுலா பயணியாக வந்தேன். சோபியான், அஹர்பால், யூஸ்மார்க் உட்பட பல இடங்களுக்கு பைக்கில் நண்பர்கள் சிலருடன் சுற்றிப் பார்த்தோம்.
எந்த ஆயுதமும் இல்லை, எந்த பாதுகாப்பும் தேவைப்படவில்லை. திறந்த சாலைகள், திறந்த மனங்கள் கொண்ட மக்கள். ஒரு காலத்தில் எப்போதும் பதற்றமாக இருந்த சோபியான் இன்று என்னை அமைதியுடன் வரவேற்றது. இதுதான் காஷ்மீரின் மாற்றம். இதுதான் நம்பிக்கை. இது பெருமை அளிக்கிறது. இவ்வாறு ஓய்வு பெற்ற பிரிகேடியர் தீப் பகத் கூறியுள்ளார். இவரது வீடியோவை 4.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

More Stories
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் ஹிந்துக்களை மிஞ்சாது: ஓவைசி
விமானங்களின் தரப் பரிசோதனை: 754-ல் கோளாறானவை 377 – மத்திய அரசு தகவல்
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!