February 7, 2026

எனது உயிருக்கு ஆபத்து; முதல்வரை சந்திக்க வேண்டும்” – மதுரை திமுக நிர்வாகி வி.கே.குருசாமி உருக்கம்

வி.கே.குருசாமி

வி.கே.குருசாமி

Follow Us

மதுரை: “என்மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளால் என்னால் வெளியில் நடமாட முடியவில்லை, எனவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து எனது குறைகளை கூறவேண்டும்” என மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டலத் லைவர் வி.கே.குருசாமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சியின் முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி. இவருக்கு அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டி குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் முன்விரோதம் மற்றும் கொலை வழக்கு காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் மதுரை கிழக்கு ரயில் நிலையம் அருகே உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பேசிக்கொண்டிருந்த போது என்னை குண்டர் வழக்கில் கைது செய்தனர். 2016- ல் ஓபுலா படித்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வழக்கு போட்டனர். இது போன்று பல பொய் வழக்குகளை காவல்துறையினர் என்மீது பதிவு செய்துள்ளனர். ஆனால் பெங்களூருவில் என்னை வெட்டியவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நான் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, எனக்கு பாதுகாப்பு வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தேன். அதன்பேரில் போலீஸார் எனக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

ஆனால், எப்போது வேண்டுமென்றாலும் பாதுகாப்பை நீக்குவோம் என காவல்துறையினர் மிரட்டுகின்றனர். எனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கூட எனது உறவினர் மகனை போலீஸார் என்கவுண்டரில் சுட்டக்கொலை செய்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு எனது குடும்பத்தில் நடைபெற்ற காதணி விழாவை நடத்த விடாமல் தடுத்தனர். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின் படி விழா நடைபெற்றது. அப்போதும் என்னை கைது செய்து, இந்த விழாவில் கிடைத்த பணத்தையெல்லாம் போலீஸார் எடுத்துச் சென்றுவிட்டனர்.

2001-ல் கவுன்சிலர் தேர்தலில் திமுகவில் சீட் வழங்காததால், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றேன். 2011 தேர்தலில் நானும் எனது மகளும் வெற்றி பெற்றோம். என் மீது தவறு இருந்தால் மக்கள் எப்படி என்னை மீண்டும், மீண்டும் தேர்வு செய்வார்கள். இப்போதும் நான் பொது மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன்.

தற்போது கூட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எங்கள் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். இந்த பகுதியில் திமுகவை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், என்னை அழிக்க திட்டமிட்டு, பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

நான் சட்டத்தை மீறி போக மாட்டேன். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முன்பு, கருணாநிதி இருக்கும்போது, இது போன்று நான் பாதிக்கப்பட்டால், உடனே கூப்பிட்டு கேட்பார். எனவே, நான் எங்கள் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்திக்க வேண்டும். அவரிடம் என்னுடைய கோரிக்கைகளை கூற வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். என்னால் முடியவில்லை. எனவே, அவர் என்னை அழைத்து எனது கோரிக்கைகளை கேட்டு எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love