
சென்னை: இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இத்தாலி அணியில் இந்திய வம்சாவளி வீரரா ஜஸ்பிரீத் சிங் இடம்பெற்றுள்ளார். இவர் பஞ்சாபின் பக்வாரா பகுதியைச் சேர்ந்தவர்.
இவரது குடும்பம் 22 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் பெர்கமோ பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்போது ஜஸ்பிரீத் சிங்குக்கு வயது 10 தான். சில காலம் பெர்கமோவிலுள்ள உள்ளூர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து ஜஸ்பிரீத் சிங் கிரிக்கெட் பயிற்சி பெற்றார்.
அதன் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்று கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார். அப்போது அங்கு தங்குவதற்கான செலவையும், கிரிக்கெட் செலவையும் சமாளிக்க உபேர் கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றினார்.
இதுகுறித்து ஜஸ்பிரீத் சிங் கூறும்போது, “எனது தந்தை தீரத் சிங், தாய் ஜஸ்வீர் கவுர் ஆகிய இருவரும் பக்வாராவில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றினர். அப்போது திடீரென வாய்ப்பு கிடைத்து இத்தாலி சென்றோம். முற்றிலும் புதிய நாடு, புதிய மொழி, புதிய கலாச்சாரம் என மிரட்சியாக இருந்தது.
ஆனால் கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டேன். அப்போதுதான் உபேர் டாக்ஸி டிரைவராக பணியாற்றினேன். மீண்டும் இத்தாலிக்குத் திரும்பி இத்தாலி தேசிய அணியில் இடம்பிடித்தேன்.
தாய்நாட்டுக்கு வந்து உலகக் கோப்பையில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு உலகத் தரத்தில் கிரிக்கெட் வசதிகள் உள்ளன” என்றார். மிதவேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் சிங், இத்தாலி அணிக்காக 2019-ல் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

More Stories
T20 WC 2026 அலசல்: ஆர்ச்சர், ஆதில் ரஷீத் பந்துவீச்சை நொறுக்கிய நேபாளம்!
வலிமையான அணி! அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு டிரம்ப் பாராட்டு!
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்!